

சி.காவேரி மாணிக்கம்
இதுவரை மாநில அரசு மூலமாக விவசாயத்தைக் காப்பாற்றிய தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு மத்தியில், ஒருபடி மேலே போய் மத்திய அரசின் மூலமாக சூர்யா விவசாயத்தைக் காப்பாற்றுவதே ‘காப்பான்’.
இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் சூர்யா. இந்தியாவின் நலனுக்காக பல்வேறு வேலைகளைக் கச்சிதமாகச் செய்து முடிக்கிறார். இவ்வளவுக்கும் நடுவில் தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூரில் இயற்கை விவசாயமும் செய்கிறார்.
லண்டனுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மோகன் லால் உயிருக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதை அறிந்து, அவரைக் காப்பாற்றுவதற்காக சூர்யாவையும் லண்டனுக்கு அனுப்பி வைக்கின்றனர் ராணுவ உயரதிகாரிகள். அதன்படியே சூர்யாவும் லண்டனில் மோகன் லால் உயிரைக் காப்பாற்ற, மகிழ்ந்துபோன அவர், சூர்யாவை ராணுவத்தின் உளவுப்பிரிவில் இருந்து விடுவிடுத்து, எஸ்பிஜி (Special Protection Group) எனப்படும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் பணியமர்த்துகிறார்.
அடுத்தடுத்து பிரதமருக்கு வரும் ஆபத்துகளில் இருந்து சூர்யா அவரைக் காப்பாற்றினாரா? விவசாயத்துக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? அதை சூர்யா எப்படிக் காப்பாற்றினார்? சூர்யாவுக்கும் சயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? என்பதெல்லாம் மீதமுள்ள இரண்டரை மணி நேரக் கதை.
‘கில்லி’ படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தியைப் பார்த்து தாமு ஒரு டயலாக் சொல்வாரே... அதுமாதிரி நான்கு லோட்டா கஞ்சியைக் குடித்தவர் போல் விறைப்பாக இருக்கிறார் சூர்யா. ஹரி படங்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட அந்த மேனரிஸம், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘என்.ஜி.கே.’ படங்கள் தாண்டி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வழக்கம்போல் அவருடைய உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிப்போனது சோகம்.
வழக்கமான ஹீரோயினாக சயிஷா. அவருடைய இடுப்பு டான்ஸுக்குக் கூட இந்தப் படத்தில் வேலை இல்லை. பிரதமராக மோகன் லால், பக்குவமாக நடித்துள்ளார். ஆனால், அவர் நல்லவரா? கெட்டவரா? என அவருடைய பாத்திரப் படைப்பு குழப்பத்தில் ஆழ்த்துகிறது. விவசாயத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகப் பேசும் மோகன் லால், தொழிலதிபரான பொமன் இரானியின் வண்ட வாளங்கள் தெரிந்தும், அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், லண்டன் தொழிலதிபர் மாநாட்டில் பாராட்டிப் பேசுவது ஏன்?
பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், தலைவாசல் விஜய், டிஆர்கே கிரண் ஆகியோர் பொறுப்பாகத் தங்களுடைய பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆர்யாவுக்கு கிட்டத்தட்ட இது கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோல் என்றுதான் சொல்ல வேண்டும். வில்லனாக நடித்துள்ள சிராக் ஜானி, எலைட் வில்லத்தனத்தில் மிளிர்கிறார். சில வருடங்களுக்கு முன்புவரை ஹீரோயினாக நடித்த பூர்ணா, இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இரண்டே காட்சிகளில் வந்து போகிறார். ‘சர்கார்’ புகழ் செய்தி வாசிப்பாளர் அனிதாவை, இந்தப் படத்தில் விவசாயச் செய்தியாளராக நடிக்க வைத்துள்ளனர்.
எஸ்பிஜி அதிகாரிகளின் சிறப்பைச் சொல்லியிருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்த கே.வி.ஆனந்த், ‘சாவுக்கும் சேர்த்து சம்பளம் வாங்குறோம்’, ‘துப்பாக்கிச் சத்தம் கேட்டா பதுங்குறவங்களுக்கு மத்தியில், நெஞ்சைக் காண்பித்து துப்பாக்கிக் குண்டை வாங்குறவங்க நாங்க’ என ஒருசில வசனங்கள் மூலமாக அதைக் கடந்து செல்கிறார்.
சூர்யா - சயீஷா காதல், படத்தின் ஆகப்பெரிய பலவீனம். வலிந்து திணிக்கப்பட்டக் காதல் காட்சிகள், எரிச்சலைத் தருகின்றன. ஒருசில காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் சற்று தூக்கலாகவே உள்ளன.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு, கே.வி.ஆனந்த் ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாக சம்பளம் தரத் தேவையில்லை. ஏற்கெனவே தன்னுடைய படங்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட ட்யூன்களையே கே.வி.ஆனந்த் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே போட்ட/கேட்ட ட்யூன்கள் என்றாலும், ஒன்றிரண்டு பாடல்களாவது ரசிக்கிற வகையில் இருக்கும். இந்த முறை அதிலும் கோட்டை விட்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்துக்குப் பாடல்கள் என்பது தேவையில்லாத ஆணிகள்.
அதிலும், சூர்யாவின் அறிமுகப் பாடலாக வரும் ‘சிரிக்கி’ மற்றும் படம் முடிந்தபின் டைட்டில் கார்டு ஓடும்போது போடப்படும் ‘குறிலே குறிலே’ பாடல் இரண்டும், ‘காசைக் கரியாக்காமல் பட்டாசு வாங்கி வெடி’ கதைதான். அந்தப் பாடல்களுக்காகச் செலவழிக்கப்பட்டத் தொகையை வைத்து ஒரு படமே எடுக்க தரமான இளம் இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகத்தான் சூர்யா நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சூர்யா பிரதமரைக் கொல்லச் செல்வது போல ஆரம்பத்தில் காட்சி வைத்திருப்பது; டெக்னாலஜி உலகில் இளைஞர்கள் எவ்வளவோ தெரிந்து வைத்திருக்கும் நிலையில், பிரதமருக்கான பொறுப்பு தெரியாமல் ஆர்யா விளையாட்டுப்போக்கில் நடந்துகொள்வது; எனக்கு ஆதரவாக நடந்து கொள்ளாவிட்டால் ஆட்சியில் இருந்து தூக்கி விடுவேன் என வில்லன் மிரட்டுவது; சூர்யாவுடன் இருப்பவர்களே கறுப்பு ஆடுகளாக வில்லன்களுக்குத் துணை போவது... எனப் பாகவதர் காலத்து பல விஷயங்கள் இந்தப் படம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே கதை, நடிகர்களைத் தாண்டி லோகேஷன்களையும், கேமரா கோணங்களையும்தான் கண்கள் தேடும். ஆனால், இந்தப் படத்தில் அது சுத்தமாக மிஸ்ஸிங். ஒருபக்கம் பிரதமர் பாதுகாப்பு, இன்னொரு பக்கம் விளைநிலங்களைத் தோண்டி கனிமங்களைச் சுரண்டுவது எனக் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சித்து, அதில் தோல்வி கண்டிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதில் எதையாவது ஒன்றை எடுத்துக் கதை பண்ணியிருந்தாலே நன்றாக இருந்திருக்குமெனத் தோன்றுகிறது. இதில், ‘இந்தக் கதை என்னுடையது, உன்னுடையது’ என நீதிமன்றத்தில் வழக்கு வேறு. ஆனால், விளைந்த பயிர்களைச் சாப்பிடும் சிலிபெரா பூச்சிகள், பகீர் ரகம்.
தற்போதைய அரசியல் நிகழ்வுகளை நையாண்டியாகச் சொன்னாலும், ‘ஜி’, ‘போன ஆட்சியில் செய்த தவறை இந்த ஆட்சியில் சரிசெய்ய வேண்டியதா இருக்கு’ என அரசியல் உள்குத்துகளையும் படத்தில் வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்கிடையில் விஜய் சேதுபதியை வேறு சீண்டியிருக்கிறார். அது புகழ்ச்சியா? இகழ்ச்சியா? என்பது கே.வி.ஆனந்துக்கே வெளிச்சம்.
எஸ்பிஜி அதிகாரியாகப் பிரதமரைக் காக்கத் தவறிய சூர்யா, இயற்கை விவசாயியாக விவசாயத்தைக் காப்பதே ‘காப்பான்’.