Published : 20 Sep 2019 05:23 PM
Last Updated : 20 Sep 2019 05:23 PM

படக்குழுவினருக்குப் புகழாரம்; அரசியல்வாதிகளுக்கு குட்டு: ரசிகர்களுக்கு அட்வைஸ் - பிகில்’ விழாவில் விஜய்யின் முழுமையான பேச்சு

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பிகில்’. மகளிர் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்தது.

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

"நன்றி நண்பா. நன்றி நண்பி.. என் நெஞ்சில் குடியிருக்கும்" என்று தன் வழக்கமான பேச்சில் தொடங்கி 'வெறித்தனம்' பாடலிலிருந்து சில வரிகளைப் பாடினார். அதனைத் தொடர்ந்து, ”பெண்கள் ஜெயிக்கிற படத்தில் வாழ்க்கையில் ஜெயித்த நயன்தாரா இருக்கிறதும் சந்தோஷம். யோகி பாபுவால் அவருடைய வீட்டு கிரகப் பிரவேசத்துக்குக் கூட போக முடியவில்லை. இப்போது அவருக்கு பெண் பார்த்து வருவதாகக் கேள்விப்பட்டேன். கரெக்ட்டா போயிடுங்க யோகி.... வீடு யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், தாலி.... (என முடிவெடுத்தவுடன், அரங்கில் சிரிப்பொலி அடங்க சில நிமிடங்கள் பிடித்தது).

தொடர்ச்சியாக மரம் நடுவது தொடர்பாக பல்வேறு வழிகளில் பணிபுரிந்து வரும் விவேக்குக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் மூலம் செளந்தர்ராஜா என்ற நல்ல நண்பர் கிடைத்துள்ளார். எப்போது பேசினாலும் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் என்று தான் ஆரம்பிப்பார். அவ்வளவு நல்ல மனிதர். சாவடிச்சு சமாதி கட்டுகிற வில்லனைத் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் டேனியல் பாலாஜியோ ஆவடியில் அம்மனுக்குக் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார்.

முதலில் ரஹ்மான் சார் இல்லாதபோது 'வெறித்தனம்' பாடலைப் பதிவு செய்தேன். ஆனால் அட்லீ, ரஹ்மான் என்னை மீண்டும் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார் என்றார். நான் பதட்டமானேன். அட்லீதான் என்னை ஊக்கப்படுத்தினார். அட்லீ படப்பிடிப்புத் தளத்தில் நெருப்பு போல இருந்தார். சுடச்சுட ஆவி பறக்கும், அது இட்லியாக இருந்தாலும் சரி அட்லீயாக இருந்தாலும் சரி.

'பிகில்' போல எல்லோரது வாழ்க்கையும் கால்பந்து ஆட்டத்தைப் போலத்தான். நம் லட்சியத்தை அடைய நினைப்போம். ஆனால் பலர் நம்மை எதிர்ப்பார்கள். நம் அணியில் இருக்கும் நபரே எதிரணிக்காக கோல் அடிப்பார். வாழ்க்கையில் வேறொருவர் போல இருக்க நினைக்காதீர்கள். உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நான் பேசுவதை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் புறக்கணித்துவிடுங்கள்.

ஒரு அமைச்சர், கலைஞர் கருணாநிதியைப் பற்றி தவறாகப் பேசினார் என்பதற்காக அவரை காரிலிருந்து இறக்கிவிட்டார் எம்ஜிஆர். நம் எதிரிகளையும் நாம் மதிக்க வேண்டும். இந்தக் கிண்டல்கள் எல்லாம் நகைச்சுவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அவை நம்மைக் காயப்படுத்தும். ஆனால் நமக்கு மற்ற வேலைகள் இருக்கின்றன. விளையாட்டு மேம்பட வேண்டும் என்றால் அரசியலில் புகுந்து விளையாட வேண்டும். ஆனால், விளையாட்டில் அரசியல் பண்ணக் கூடாது.

ரசிகர்களும், இளைஞர்களும் அவர்கள் ஹேஷ்டேக்குகளையும், ட்ரெண்டையும் வெறுப்பைப் பரப்பப் பயன்படுத்தக்கூடாது. அதை சமீபத்திய சுபஸ்ரீ மரணம் போல முக்கியமான காரணங்களுக்காகப் பயன்படுத்துங்கள். சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள். பேனரை அச்சடித்தவரையும், லாரி டிரைவரையும் கைது செய்கிறார்கள். ஆனால் அந்த விபத்துக்கு உண்மையான காரணமாக இருக்கும் நபரைக் கைது செய்யவில்லை. சரியான நபரை சரியான இடத்தில் வைத்தால் இது போன்ற விஷயங்கள் நடக்காது.

எனது புகைப்படங்களை, போஸ்டர்களைக் கிழித்தால் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டும் என்ற நினைப்பு கூட வேண்டாம். அது உங்களுக்கு நல்லது கிடையாது. என் ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு அது. போஸ்டர் கிழிப்பு போன்ற விஷயங்கள் அவர்களைக் காயப்படுத்தும்''.

இவ்வாறு விஜய் பேசினார்.

விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது 'உங்களுக்காக ஒரு மீம் வைத்திருக்கிறோம். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்' என்று ரம்யா கேட்டார். அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்தவுடன், நேசமணி தொடர்பான மீம் திரையில் காண்பிக்கப்பட்டது. அப்போது விஜய் "நேசமணி ட்ரெண்டானபோது பயங்கரமாக சிரித்தேன். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யா கூட சிரிப்பை அடக்கிக் கொண்டார். ஆனால் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை" என்று பேசினார்.

அதே போல் தொகுப்பாளர் சிவா விஜய்யிடம் "அனைத்து சூழலில் எப்படி அண்ணா ஒரே மாதிரி முகத்தை வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு விஜய் தன் சிரிப்பையே பதிலாக அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x