

யார் ஆள வேண்டும், முதல்வராக வர வேண்டும் என்பது மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்மாரி'. இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக 'சி.எம்' என்று அழைத்து வந்தார்கள். இந்தப் பெயருக்கு பெப்சி தலைவரும் மற்றும் இயக்குநர் சங்கத்தின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், "எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். முக்கியமாக தமிழக அரசு சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், முதல்வர்கள் பலரும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்.
எம்.ஜி.ஆர் சினிமாவை அவ்வளவு நேசித்தார். சினிமா துறைக்கு அவ்வளவு நல்லது பண்ணினார். அவர் காலத்தில் சினிமா வேறு, அரசியல் வேறு என்பதில் தீர்க்கமாக இருந்தார். நான் அவர் காலத்தில் படம் எடுத்துள்ளேன். அவர் முதல்வராக இருக்கும்போது 'நீதிக்கு தண்டனை' என்று படமெடுத்தேன். அவருடன் இருந்த ஒரு அமைச்சரைத் திட்டித்தான் அந்தப் படமே எடுத்தேன். அதற்கு என்னை அழைத்துப் பாராட்டினார். இது அனைவருக்குமே தெரியும். இப்போது அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?
அனைவருமே பிரபலங்களாகும்போது, மக்கள் விருப்பப்படும்போது, மக்களுக்கு நல்லது செய்யும்போது யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். யார் ஆள வேண்டும், முதல்வராக வர வேண்டும் என்பது மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. மக்கள் புதிதாக ஒருவரை அழைத்து வந்து இவர்தான் தலைவர் என்றால், அதை யாராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்