

தயாரிப்பாளர் போனி கபூரின் விருப்பத்தை 'தல 60' இயக்குநர் ஹெச்.வினோத் நிறைவேற்றுவாரா என்பது விரைவில் தெரியவரும்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அஜித்துடன் யாரெல்லாம் நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.
இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் வழங்க போனி கபூரே தயாரிக்கவுள்ளார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார்கள். இந்தப் படத்தில் போனி கபூர் தன் மகள் ஜான்வி கபூரை நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், இப்போது வரை அதனைப் படக்குழு உறுதி செய்யவில்லை.
ஆனால், இதில் தனது மகள் நடிக்க வேண்டும் என்று போனி கபூர் பெரிதும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதற்காக ஏதேனும் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாரா ஹெச்.வினோத் என்பது விரைவில் தெரியவரும்.
அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தொடர்பான அறிவிப்பு படப்பூஜை நடைபெறும் நாளன்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஹெச்.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் அஜித்துடன் இதுவரை எந்தவொரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ஆகையால், அவரை இதில் நாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற திட்டமும் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு உள்ளது. கால்ஷீட் தேதிகள், சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் இறுதி செய்யப்பட்டால் அதுவும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்