

புதுமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கே 13'. எஸ்.பி சினிமாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கு பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார்.
இறுதியாக புதுமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் சொன்ன கதை அவருக்குப் பிடித்திருக்கவே உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமான்ட்டி காலனி' படத்தின் இயக்குநராக அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இன்னாசி பாண்டியன் என்பது நினைவு கூரத்தக்கது.
சென்னையில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் பிரதான காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். சுமார் 40 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனைக் கலந்து இதனை உருவாக்கி உள்ளனர். இது வரை இப்படியொரு கதைக்களம் தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்று தெரிவித்துள்ளது படக்குழு.