’’ ‘புதிய வார்ப்புகள்’ல நினைச்சேன்; ‘இது நம்ம ஆளு’ல முடிச்சேன்’’ - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

’’ ‘புதிய வார்ப்புகள்’ல நினைச்சேன்; ‘இது நம்ம ஆளு’ல முடிச்சேன்’’ - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி
Updated on
1 min read

வி.ராம்ஜி


‘’ ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நினைத்தேன். எழுத்தாளர் சோலை சொன்ன அறிவுரையால், ‘இது நம்ம ஆளு’ சமயத்தில்தான் அதை நிறைவேற்றினேன்’’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் பேட்டியில் தெரிவித்தார்.


நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் முதலில் டைரக்ட் செய்த படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. 1979ம் ஆண்டு வெளியானது. இந்த வருடம் பாக்யராஜ் திரைக்கு வந்து 40 ஆண்டுகளாகின்றன.


இதையொட்டி, கே.பாக்யராஜுக்கு, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


மேலும் தன் 40 வருட அனுபவங்களை ’இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு அளித்த வீடியோ பேட்டியில் பகிர்ந்து கொண்டார் பாக்யராஜ்.


அதில் அவர் கூறியதாவது:


எங்கள் இயக்குநர் பாரதிராஜா சாரின் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே கதைகள் படிப்பதிலும் நாவல் படிப்பதிலும் ஆர்வம் இருந்தது எனக்கு. ‘பொன்னியின் செல்வன்’ மாதிரியான கதைகள், ஜெயகாந்தனின் கதைகள், காண்டேகர் கதைகள் என படித்து வந்தேன். அதில் உள்ள நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு, கதை பண்ணியிருக்கிற விதம் பிரமிப்பாக இருக்கும்.


இதே சமயத்தில், அதாவது ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் வேலையிலும் இறங்கியிருந்தேன். மேலும் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்.


அந்த வேளையில், எழுத்தாளர் சோலையிடம் பத்திரிகை தொடங்க இருக்கும் ஆசையைத் தெரிவித்தேன். உடனே அவர், ’ஒரே சமயத்துல ரெண்டு படகுல போக முடியாது. ஒரே சமயத்துல ரெண்டு குதிரைல சவாரி போகமுடியாது. முதல்ல சினிமால நல்லா கால் ஊன்றி நில்லுங்க. இதுல ஜெயிச்ச பிறகு, நிலையான இடத்துக்கு வந்த பிறகு, பத்திரிகையை நடத்துங்கள்’ என்றார்.


அவருடைய அட்வைஸ் எனக்கு சரியென்று பட்டது. அதனால், ‘புதிய வார்ப்புகள்’ படத்துக்குப் பிறகு, ஒவ்வொரு படமாக இயக்கினேன். நடித்தேன். பிறகு பல படங்களுக்குப் பிறகுதான், ‘இது நம்ம ஆளு’ படம் எடுத்தேன். இந்தப் படத்தின் போதுதான், ‘பாக்யா’ பத்திரிகையை ஆரம்பித்தேன்.

இந்த வருடம் ‘பாக்யா’ பத்திரிகை தொடங்கி, 32 வருடங்களாகின்றன.


இவ்வாறு கே.பாக்யராஜ் தன் பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.


கே.பாக்யராஜ் அளித்த வீடியோ பேட்டியைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in