Published : 16 Sep 2019 02:51 PM
Last Updated : 16 Sep 2019 02:51 PM

’ஆறிலிருந்து அறுபது வரை’ - அப்பவே அப்படி கதை

வி.ராம்ஜி


ஒரு குடும்பத்தின் தலைச்சன் பிள்ளை என்பவன், இன்னொரு தகப்பன் என்பார்கள். அதிலும், சிறுவயதிலேயே குடும்பத்தலைவனை இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்துக்கு அவன் தகப்பன்சாமி. குடும்பத்தலைவனும் கூட! அப்படி தம்பி, தங்கைக்காக இளம் வயதிலிருந்தே உழைக்கத் தொடங்கியவனின் கதையைக் கேட்காமலேயே... நம் கண்கள் அவனுக்காகக் கண்ணீர் சிந்தும் அல்லவா. அந்தக் கண்ணீர்க் கதை, வெள்ளித்திரையில் படமாக விரிந்தால், எப்படி இருக்கும்?


இது ஏதோ சிவாஜியோ ஜெமினியோ ஏவிஎம்.ராஜனோ நடித்த படம் என்று நினைத்துவிடாதீர்கள். இன்றைக்கு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுக்கும் தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்ற ரஜினிகாந்த் நடித்த படம் இது. ஆறு வயதில் இருந்தே குடும்பத்துக்காக ஓடி உழைத்து ஓடாய்த் தேய்ந்தவனின் கதையைத் தாங்கி வந்த அந்தத் திரைப்படம்... ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
அன்றைக்கு ஸ்டைலாலும் வில்லத்தனத்தாலும் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தார் ரஜினிகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக சின்னதும் பெரிதுமாக வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், முக்கியமான வில்லனாக, கெட்ட வில்லனாக, வில்ல குணம் கொண்ட கதாநாயகனாக வளர்ந்து கொண்டே இருந்தார்.

டைட்டிலில், ‘ரஜினிகாந்த்’ என்ற பெயர் வரும் போது, ரசிகர்கள் விசிலடிக்கத் தொடங்கியதான் ஆரம்பம், அந்த வருடங்களில்தான் நிகழ்ந்தது. எழுபதுகளின் இறுதிக் கட்டம். இந்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் 79ம் ஆண்டு வெளியானது.
நல்ல வசதிகளுடன் வாழ்ந்து வரும் தேங்காய் சீனிவாசனுக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். மூவரில் ஒருவர்தான் ரஜினி. அப்போது சிறுவன். ஓர் விபத்தில் தேங்காய் சீனிவாசன் இறந்துவிட... அந்த வீட்டை வறுமை சூழ, வீட்டுக்கு மூத்த பையனான சந்தானம் (ரஜினி), தன் தம்பிகளையும் தங்கையையும் கரை சேர்க்க, ஆறாவது வயதில் வேலைக்குச் செல்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற முனைகிற போராட்டம் அந்த வயதிலேயே துவங்குகிறது.


அப்பா பார்த்த கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார். தம்பி, தங்கைகளைப் படிக்க வைக்கிறார் சந்தானம். கடன் மேல் கடன் என்று வாங்கி வாங்கிப் படிக்க வைத்து வளர்க்கிறார். இந்தநிலையில், அலுவலகத்தில் வேலை செய்யும் சங்கீதா, ரஜினியை விரும்புகிறார். ரஜினியும்தான்! ஆனால் ரஜினியின் பொருளாதாரச் சூழல், தம்பிகள், தங்கை என்று வளர்க்கக் கடன் வாங்கிய நெருக்கடிகளையெல்லாம் கருத்தில் கொண்டு, வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார் சங்கீதா.


தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கிறார் ரஜினி. பணம் தேவைப்படுகிறது. அப்போது, ‘இந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாயா? அவர்கள் வீட்டில் ஐந்தாயிரம் ரூபாய் வரதட்சணைப் பணம் தருவார்கள்’ என்று சொல்ல, அந்தப் பணத்துக்காக, படாபட் ஜெயலட்சுமியைக் கல்யாணம் செய்துகொள்கிறார். ஆனால் பணம் தரவில்லை. பிறகு மனைவி மீது பிரியமும் அன்புமாக இருக்கிறார்.


தம்பி படித்து முடித்து நல்ல வேலைக்குச் செல்கிறார். ஆனால் அண்ணனுக்கு உபயோகமில்லை. இன்னொரு தம்பி, கைநிறைய சம்பாதிக்கும் அண்ணனிடம் செல்கிறார். கஷ்டப்பட்டு வளர்த்த அண்ணனை விட்டுச் செல்கிறார்.


வறுமையின் பிடியில் உழன்று தவிக்கும் ரஜினி குடும்பத்துக்கு, ஆரம்பத்தில் இருந்தே சோ உதவிகள் செய்து வருகிறார். இந்தநிலையில், எப்போதும் உதவி செய்துகொண்டிருக்கிற முதலாளி பக்கவாதத்தால் படுத்தபடுக்கையாக, அவரின் மகன் பொறுப்புக்கு வருகிறார். ‘அப்பாவிடம் வாங்கிய பணத்தையெல்லாம் செட்டில் செய்துவிட்டு, வேலையில் சேருங்கள்’ என்று கறார் காட்ட, நிலைகுலைந்து போகிறார் ரஜினி. அப்போது தான் வேலை செய்யும் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார்.


அங்கே, பிழை திருத்தும் பணி. அப்போது வருகிற கதைகளையெல்லாம் படித்து, நொந்து போகும் ரஜினி, விளையாட்டாக தன் வாழ்க்கையையே கதையாக எழுதுகிறார். இந்தசமயத்தில், மனைவி ஒரு தீவிபத்தில், குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறார். மனைவி கட்டிய இன்சூரன்ஸ் பணம் கைக்கு வருகிறது. கதையும் புத்தகமாக அச்சிடப்படுகிறது. அந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, எழுத்தாளராகிறார் ரஜினி. குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். தம்பிகளும் தங்கையும் வந்து ஒட்டிக்கொள்கிறார்கள். ஆறாவது வயதில் உழைக்கத் தொடங்கிய சந்தானம் என்கிற மனிதர், தன் 60வது வயதில் மரணத்தைத் தழுவுகிறார். படம் நிறைவுறுகிறது. கனத்த இதயத்துடன், ஓர் மனிதனின் வாழ்க்கையை உள்வாங்கிய சோகத்துடன் வெளியே வருகிறது ரசிகர் கூட்டம்.


பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம் இது. பஞ்சு அருணாசலம் தயாரிப்பாளர். படத்தின் கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம்தான் எழுதியிருந்தார். வீட்டுக்கு வரும் வழியில் பெண்ணைக் காப்பாற்றுவார். ‘புள்ளகுட்டிங்களோட நீங்க நல்லாருக்கணும்’ என்று ரஜினியை வாழ்த்துவார் அந்தப் பெண். வீட்டுக்கு வந்தால், மனைவி படாபட் இறந்துவிடுவார். ’அந்த அம்மா,புள்ளகுட்டிங்களோ நல்லா இருன்னுதான் சொன்னா. பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லா இருன்னு சொல்லலையே...’ என்று அழுவார் ரஜினி. ஒரு சாதாரண வார்த்தை, மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்திவிடும் நமக்கு!

ரஜினி, ஜெயா, சங்கீதா, படாபட் ஜெயலட்சுமி, சோ, சுருளிராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள்.
ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். ‘முள்ளும் மலரும்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘பைரவி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ வரிசையில், இந்தப் படமும் ரஜினியின் உன்னத நடிப்பை வெளிக்கொண்டு வந்த படமாக அமைந்தது.


வழக்கம் போல் பாபுவின் ஒளிப்பதிவும் விட்டலின் எடிட்டிங்கும் படத்துக்கு பலம் சேர்த்தன. ’அவள் ஒரு தொடர்கதை’, ‘முள்ளும் மலரும்’ போல் துடுக்வெடுக் படாபட் ஜெயலட்சுமி, இதில் தன் கேரக்டர் உணர்ந்து, மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சந்தானம் எனும் கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் ரஜினி. தன் இயல்பான வேகத்தையெல்லாம் குறைத்துக் கொண்டு, நடையிலும் பேச்சிலும் கூடுதல் கவனம் செலுத்தி அசத்தினார்.


படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் தனி ரகம். ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ என்ற பாடல் இன்றைய இரவுப் பாடல்களின் பட்டியலில் டெளன்லோடு செய்யப்பட்டு, எத்தனையோ பேரின் செல்போனுக்குள் காவியம் படைத்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சு அருணாசலம் படம். இசை இளையராஜா என்று சொல்லவேண்டுமா என்ன?


1979ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ரிலீசானது ‘ஆறிலிருந்து அறுபது வரை’. எந்த கமர்ஷியலும் செய்யாமல், எந்த ரஜினியிஸமும் திணிக்காமல், மிக நேர்த்தியானதொரு படமாக அமைத்ததால்தான், இன்று வரை ரஜினி படப் பட்டியலில், தனியிடம் பிடித்திருக்கிறது இந்தப் படம்.


’ஆறிலிருந்து அறுபது வரை’ படம் வெளியாகி, 40 ஆண்டுகள் ஆகின்றன. பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் கம்பெனிக்கு வாழ்த்துகள். பஞ்சு அருணாசலம், எஸ்.பி.எம்., ரஜினி, இளையராஜா, படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்ட இந்தக் குழுவினருக்கு ஆறு ஆறு பூக்கள் கொண்ட அறுபது பூங்கொத்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x