Published : 16 Sep 2019 10:55 AM
Last Updated : 16 Sep 2019 10:55 AM

இசை ராணி எம்.எஸ்.!  - இன்று எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாள்

வி.ராம்ஜி


இசைக்கு வசமாகாதவர்கள் எவருமில்லை. மூன்று தலைமுறை ரசிகர்களின் மனங்களையும் அவர்களின் செவிகளையும் தன் குரலாலும் பாடல்களாலும் கட்டிப் போட்டவர்... இந்த நவீன செல்போன்களிலும் கூட, அவரின் பாடலே ரிங் டோனாக, டயலர் டியூனாக அலங்கரிப்பவர்... எம்.எஸ். என்று எல்லோராலும் சொல்லப்படும்... எம்.எஸ்.சுப்புலட்சுமி.


மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல், நம்மை தன் குரலால் ஆட்சி செய்த கானக்குயில், ஞானக்குயில் என்று எல்லோரும் இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.


எம்.எஸ்.சுப்புலட்சுமி... மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை சுப்ரமணியம் சுப்புலட்சுமி என்பார்கள். அம்மா சண்முகவடிவு. அப்பா சுப்ரமணியம். இவரின் குடும்பமே இசைக்கு கட்டுண்டிருந்தது. இசையே மூச்சென வாழ்ந்து வந்தார்கள்.


சிறுமி சுப்புலட்சுமிக்கு, அம்மாதான் முதல் குரு. ஆசான். வீணையின் நரம்புகள் சுப்புலட்சுமி விரல்கள் பட்டதும் புத்துணர்ச்சியுடன் சுருதி சேர்த்தன. இப்படித்தான் ஒருநாள்... சென்னை மாகாண ஆளுநர், சுப்புலட்சுமி அம்மா சண்முகவடிவின் வீணை இசையைப் பதிவு செய்துகொண்டிருந்தார்.


அப்போது இங்கும் அங்குமாக இரட்டைஜடையுடன் ஓடியாடிக்கொண்டிருந்தாள் சுப்புலட்சுமி. ‘இங்கவாம்மா. ஒரு பாட்டு பாடேன்’ என்றார்கள். பாடினாள். மொத்தக் குடும்பமும் ஆச்சரியத்தில் நின்றது. ‘என்ன குரல் இவளுக்கு. அம்மாவையே மிஞ்சிருவா பாரு’ என்று உச்சி முகர்ந்து, கொண்டாடியது.


வீட்டில் இருந்து வெளியே வந்து பாடினார். ஊருக்குள் பாடினார். ஊரை விட்டு அடுத்தடுத்த ஊர்களில் பாடினார். மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பாடும் அளவுக்கு வளர்ந்தார். உயர்ந்தார்.


பாடகி சுப்புலட்சுமிக்கு,நடிப்பதற்கும் வாய்ப்பு வந்தது. நடித்தார். நடித்துப் பாடினார். பாடி நடித்தார். அந்தப் பாட்டில் கிறங்கிப் போன, படத்தின் தயாரிப்பாளர் சதாசிவம், தன் விருப்பத்தைச் சொல்ல, இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு, சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று இசையுலகில் ராணியென உயர்ந்ததற்கு, சதாசிவம் என்கிற கல்கி சதாசிவம் எனும் அன்புக்கணவர் உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னே பெண் இருப்பாள் என்பது இங்கே அப்படியே மாறியிருந்தது.


திரையுலகம், கச்சேரி, தேசப் பற்று என மூன்று விதமான சூழல்களுக்குள்ளேயும் புகுந்து புறப்பட்டன எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள். ’பக்தமீரா’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல்... இன்றைக்கும் நம்மை என்னவோ செய்யும். காற்றில் கலந்து உலாவிக்கொண்டிருக்கும் அந்தப் பாடல்... ‘காற்றினிலே வரும் கீதம்’.


எம்.எஸ். பாடல்கள்தான் அன்றைக்கு எல்லாத் துறைகளிலும் எல்லாத் தலைவர்களுக்கும் நிம்மதி கீதம். ஜவஹர்லால் நேரு, மெளண்ட்பேட்டன் பிரபு என டில்லி வரை குரல் சென்று மனதை தன் பாடலின் பக்கம் இழுத்தது.


தேசபக்திப் பாடல்களை இவர் பாடினார். விலகி விலகி இருந்த இந்தியர்கள் கைகோர்த்து ஒன்றுபட்டார்கள். இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடினார். பாடலுக்குள் மூழ்கி, ஆன்மிக முத்தெடுக்க முனைந்தார்கள் மக்கள். 1944ம் ஆண்டில், நிதி திரட்டுவதற்காக பாடினார். பாட்டைக் கேட்க, சென்ற இடங்களிலெல்லாம் பெருங்கூட்டம். திரட்டிய நிதியைக் கண்டு எல்லோரும் அதிர்ந்து போனார்கள். இரண்டு கோடி ரூபாய் நிதியைத் திரட்டித் தந்தார். அத்தனைக்கும் டாலடிக்கும் அந்த மூக்குத்தியில் இருந்து மதுரை மீனாட்சியே அருள் தர இறங்கி வந்து, பாடுவதாகச் சிலிர்த்ததே காரணம்.


தெலுங்கு பேசும் ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில், இன்றைக்கும் தினமும் சுப்ரபாதம் பாடப்படுகிறது. அந்த சுப்ரபாதத்தின் சுகந்தக் குரல்... எம்.எஸ்.ஸின் காந்தக்குரல்.


‘அலைபாயுதே கண்ணா’ பாடினால், அந்தக் கண்ணனே பாய்ந்தோடி வருவான் இங்கே. ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடினால், ‘நிறைவு நிறைவு நிறைவு’ என அந்த மலையப்ப சுவாமியே கீழிறங்கி வருவான்.


போகாத ஊரில்லை. ஏறாத மேடையில்லை. பாடாத இசையில்லை. வாங்காத பட்டமோ, பரிசோ, பதக்கங்களோ இல்லை. இசையை ரசிப்போர் இல்லங்களில், சிரித்த முகத்துடன், மங்கலச் சின்னங்களுடன், அந்த டாலடிக்கும் மூக்குத்தியுடன் இசையின் வடிவமாகவே காட்சி தரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகைப்படத்துடன் கொண்ட ஒலித்தட்டுகள், நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.


அந்த காந்தக் குரல் நாயகி, குரலிசைக் குயில்... எம்.எஸ்.அம்மா என்று போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இன்று செப்டம்பர் 16ம் தேதி பிறந்தநாள். 103வது பிறந்தநாள். அவரைப் போற்றுவோம். இசைக்குயிலைக் கொண்டாடுவோம். இசையரசியைப் போற்றிக் கொண்டாடுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x