தொடரும் சாக்லேட் பாய் பட்டம்: சித்தார்த் காட்டம்

தொடரும் சாக்லேட் பாய் பட்டம்: சித்தார்த் காட்டம்
Updated on
1 min read

சாக்லேட் பாய் என்று தொடர்ச்சியாக அழைத்து வருவதற்கு சித்தார்த் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் ஜோஸ், காஷ்மீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வசூல் ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த வாரம் எந்தவொரு புதிய படமும் வெளியாகாதது இந்தப் படத்துக்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை விளம்பரப்படுத்த சித்தார்த் பல்வேறு பேட்டிகள் அளித்துள்ளார்.

அதில் 'சாக்லேட் பாய் பட்டம்' குறித்த கேள்விக்கு சித்தார்த் "இனிமேலும் என்னை சாக்லேட் பாய் என்று யாராவது அழைத்தால் கடும் கோபம் தான் வரும். ஒவ்வொரு படத்திலுமே வித்தியாசம் காட்டித்தான் வருகிறேன். மீண்டும் மீண்டும் என்னை ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்க வைக்காதீர்கள்.

தெலுங்குத் திரையுலகில் எனக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் இருக்கிறார்கள். அங்கு அப்படியான கதைகளில் தான் நடித்துள்ளேன். தமிழில் அந்த வரிசையில் எனக்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' அமைந்துள்ளது" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார் சித்தார்த்

'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தைத் தொடர்ந்து, சாய் சேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருவம்' படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். இந்தாண்டு இறுதிக்குள் இதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in