Published : 15 Sep 2019 01:00 PM
Last Updated : 15 Sep 2019 01:00 PM

’காதலிக்க நேரமில்லை’ - ‘சர்வர் சுந்தரம்’ ; ஒரே வருடத்தில் இரண்டு சூப்பர் ஹிட் காமெடி படங்கள்

வி.ராம்ஜி


ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படமும் பாலசந்தரின் கதை வசனத்தில் வந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் ஒரே வருடத்தில் வெளியாகின. இரண்டுமே காமெடிப் படங்கள். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.


1964ம் ஆண்டில், எம்ஜிஆரும் சிவாஜியும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். இந்த வருடத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் தலா ஏழு படங்கள் பண்ணினார்கள். இதில் இருவருக்குமே தலா 4 படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.


சிவாஜி, சொந்தப் படம் தயாரித்தார். அது ‘புதிய பறவை’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேசமயம், சிவாஜிக்கு 100வது படம் வந்தது. அந்தப் படம் ‘நவராத்திரி’. ஆனால் இந்தப் படம் சரியாகப் போகவில்லை.


இதேபோல், எம்ஜிஆருக்கு ஏழு படங்களில் மூன்று படங்களில் சரியாகப் போகவில்லை. ‘படகோட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.


இந்த 64ம் வருடத்தில், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நாடகத்தில் இருந்து திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார். எம்ஜிஆரின் ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதினார். ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், பாலசந்தர் கதை, வசனத்தில் ‘சர்வர் சுந்தரம்’ வெளியானது. ஆக, இந்த இரண்டுப் படங்களின் மூலமாகவும் பாலசந்தர் தமிழ்த் திரையுலகிற்குள் வந்தார்.


இதில் ‘சர்வர் சுந்தரம்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கதையின் நாயகனாக நாகேஷ் நடித்தார். படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா, எஸ்.என்.லட்சுமி, மேஜர் சுந்தர்ராஜன் முதலானோர் நடித்தார்கள். நாகேஷின் நடிப்புதான் படத்தின் மிகப்பெரிய பலம். பாலசந்தரின் இயல்பான காட்சி அமைப்புகளும் வசனங்களும் நாகேஷிடம் இருந்து மிகப்பெரிய நடிப்பை நமக்குத் தந்தன. பாடல்களும் நல்ல ஹிட்டடித்தன.


இந்தப் படத்துக்குப் பிறகுதான், பாலசந்தர் மளமளவென படங்கள் இயக்கினார். அதேபோல், நாகேஷ் இந்தப் படத்துக்குப் பிறகு பிஸி நடிகரானார். வரிசையாக எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, பாலசந்தர் படங்கள் பண்ணத் தொடங்கினார்.


இதே வருடத்தில், வீணை பாலசந்தர் இயக்கத்தில் ‘பொம்மை’ எனும் படம் வந்தது. ஆங்கிலப்படத்தின் தழுவல். ஆங்கிலப் பட சாயலில், வெளியான இந்தப் படம் பலருக்கும் புரியவில்லை. ஆனாலும் ரசித்தார்கள். இந்த ‘பொம்மை’ படம் மூலம் நமக்குக் கிடைத்த இன்னொரு விஷயம்... கே.ஜே.யேசுதாஸ். ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடல் மூலம் யேசுதாஸ் எனும் அற்புதமான பாடகர் கிடைத்தார்.


அதேபோல், கண்ணதாசன் தயாரித்து நடித்த ‘கறுப்புப்பணம்’ இந்த வருடம்தான் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்தப்படம், பெரிதாகவும் போகவில்லை. ஆனால் கதையின் மையமும் கருத்தும் வசனங்களும் பாடல்களும் பின்னர் வெகுவாகப் பாராட்டப்பட்டன.


இதே ஆண்டு, கலைஞர் கதை வசனத்தில் ‘பூம்புகார்’ வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்றது. எப்போதோ வந்த ‘கண்ணகி’ படத்தில் இருந்து, வேறொரு விதமாக தனக்கே உரிய பாணியில், கவிதைத்துவமான வசனங்களில் பிரமிக்க வைத்திருந்தார் கலைஞர் கருணாநிதி. எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி, கே.பி.சுந்தராம்பாள், ராஜஸ்ரீ என பலரும் நடித்திருந்தார்கள்.


‘பூம்புகார்’ படத்தின் க்ளைமாக்ஸ் வசனமும் விஜயகுமாரியின் நடிப்பும் எல்லோராலும் பேசப்பட்டன.


64ம் ஆண்டான இந்த வருடத்தில், புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வெளியானது. பாலையா, முத்துராமன், நாகேஷ், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்திருந்தனர்.


தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு காமெடிப் படம் கலர்ப்படமாக வந்ததென்றால், அது ‘காதலிக்க நேரமில்லை’ படமாகத்தான் இருக்கும். அதேபோல், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, படம் செய்து, நம்மை உலுக்கியெடுத்த ஸ்ரீதர், தன் பாணியில் இருந்து சற்றே விலகி, முழுக்க முழுக்க இப்படியொரு காமெடிப் படத்தைக் கொடுத்ததும் இதுவே முதல் முறை.


‘காதலிக்க நேரமில்லை’ வெற்றியை சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கும் தொலைக்காட்சியில் படத்தை ஒளிபரப்பினால், ரிமோட்டைத் தொடாமல், லயித்து, ரசிக்கிற கூட்டமே அதிகம். இன்னும் நூறாண்டுகள் கழித்தும் ‘காதலிக்க நேரமில்லை’ பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.


காமெடி படம் என்றால் லாஜிக்கெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்பார்கள். ஆனால், இதில் அத்தனை லாஜிக்குகளும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். பாடல்களுக்கும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் நடனங்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.


‘சர்வர் சுந்தரம்’ படமும் இப்படித்தான். கதை, காட்சி, வசனங்கள், நடிப்பு, பாடல்கள் என எல்லாமே அமர்க்களப்படுத்தும். இன்னும் ஆண்டுகள் செஞ்சுரி அடித்தாலும், ‘அவளுக்கென்ன...’ பாடலைக் கேட்டு கிறங்கித்தான் போவார்கள், ரசிகர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x