

வி.ராம்ஜி
1964ம் ஆண்டில் எம்ஜிஆர் ஏழு படங்களில் நடித்தார். அதேபோல் சிவாஜி கணேசனும் அந்த வருடத்தில் ஏழு படங்களில் நடித்தார்.
1964ம் ஆண்டு,தமிழ்த்திரையுலகில் மிக முக்கியமான ஆண்டு. இந்த வருடத்தில்தான் சிவாஜி பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சிவாஜி. அதேபோல், சிவாஜிகணேசனின் 100வது படம் இந்த வருடம்தான் வெளியானது. இயக்குநர் சிகரம் எனப் போற்றப்படும் கே.பாலசந்தர், இந்த வருடத்தில்தான் கதை, வசனகர்த்தாவாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
64ம் வருடத்தில், எம்ஜிஆர் நடித்த ஏழு படங்கள் ரிலீசாகின. எம்.நடேசன் இயக்கத்தில் ‘என் கடமை’ படத்தில் நடித்தார் எம்ஜிஆர். இந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. அதேபோல், சுப்பாராவ் இயக்கத்தில் ‘தாயின் மடியில்’ படத்தில் நடித்தார். இதுவும் பேர்சொல்லும் படமாக அமையவில்லை.
பின்னாளில், சிவாஜிகணேசனை வைத்து ஏராளமான படங்களை இயக்கிய பி.மாதவன் இந்த வருடத்தில், எம்ஜிஆரை வைத்து ‘தெய்வத்தாய்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் வசனகர்த்தா கே.பாலசந்தர். தமிழ் சினிமாவுக்கு இந்தப் படத்தில் இருந்துதான் அறிமுகமானார் பாலசந்தர். எம்ஜிஆருடன் இவர் பணியாற்றிய ஒரே படம் இதுதான். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.
டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், எம்ஜிஆர் நடித்த ‘படகோட்டி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வருடத்தில் எம்ஜிஆர் நடித்த கலர்ப்படமும் இதுமட்டும்தான். தேவர்பிலிம்ஸ் தயாரிப்பில், ‘தொழிலாளி’ படம் சுமாராகத்தான் ஓடியது. ‘வேட்டைக்காரன்’ வெற்றி பெற்றது. டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், ‘பணக்கார குடும்பம்’ வெற்றி பெற்றது.
ஆக, எம்ஜிஆரின் ஏழு படங்களில் 4 படங்கள் எம்ஜிஆருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன.
சிவாஜிகணேசனும் 64ம் ஆண்டில், ஏழு படங்களில் நடித்தார். கே.சங்கரின் இயக்கத்தில், பிஎஸ்.வீரப்பா தயாரிப்பில், சிவாஜி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘கைகொடுத்த தெய்வம்’ மிகபிரமாதமான வெற்றியைச் சந்தித்தது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு நிகராக சாவித்திரியின் நடிப்பு பேசப்பட்டது.
அதேபோல், இந்தப்படத்தில் ஒரேயொரு பாடலில், மகாகவி பாரதியாராக சிவாஜி வருவார். ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாடலைப் பாடுவார்.
பி.ஆர்.பந்துலுவின் ‘முரடன் முத்து’ சுமாராகத்தான் ஓடியது. ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘பச்சை விளக்கு’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவாஜிக்கும் ரசிகர்களுக்கும் இந்த வருடம் மிக முக்கியமான வருடம். ஏபி.நாகராஜன் இயக்கத்தில், சிவாஜியும் சாவித்திரியும் நடித்த ‘நவராத்திரி’ திரைப்படம் இந்த வருடம்தான் வெளியானது. இதுதான் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த படம். சிவாஜிக்கு 100வது படம். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. இந்தப் படத்திலும் சிவாஜிக்கு நிகரான சாவித்திரியின் நடிப்பு அற்புதம்.
இதேபோல், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘கர்ணன். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போலவே இந்தப் படமும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. பிரமாண்டமாக ஓடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாராகத்தான் ஓடியது. ‘கர்ணன்’ தன் வள்ளல்தன்மையை, வசூலில் காட்டவில்லை என்பதில் சிவாஜி ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள்.
இந்த வருடத்தில்தான், சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, படம் தயாரித்தார். முதல் படமே வண்ணப்படம். 64ம் ஆண்டில், ‘கர்ணன்’, ‘புதிய பறவை’ என இரண்டு வண்ணப்படங்களில் நடித்தார். ‘புதிய பறவை’ பல ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. வசூலிலும் சாதனை புரிந்தது. சிவாஜி, சரோஜாதேவி, செளகார் ஜானகி ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
ஆக, சிவாஜி ஏழு படங்களில் நடித்தார். இதில், ‘ஆண்டவன் கட்டளை’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பச்சைவிளக்கு’, ‘புதிய பறவை’ என நான்கு படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஏழுக்கு நான்கு என்ற வகையில், எம்ஜிஆரும் சிவாஜியும் இந்த வருடத்தில் வெற்றியைச் சுவைத்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.