

'தலைவி' படத்தில் 4 கெட்டப்களில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்துக்காகத் தமிழ் மற்றும் பரதநாட்டியம் என கற்று வருகிறார் கங்கணா.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் இயக்குநர் விஜய் கவனம் செலுத்தி வந்தார். இந்தப் படத்துக்காக கங்கணா தயாராகி வந்தாலும், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது.
முதன்முறையாக இந்தப் படத்தின் கங்கணாவின் கெட்டப்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "’தலைவி’ படத்தில் கங்கணாவுக்கு நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்கள் (கெட்டப்) இருக்கிறது.
'ஹங்கர் கேம்ஸ்', 'கேப்டன் மார்வல்', 'ப்ளேட் ரன்னர் 2049' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ், கங்கணாவின் தோற்றங்களை வடிவமைக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.