Published : 14 Sep 2019 03:10 PM
Last Updated : 14 Sep 2019 03:10 PM

இந்தியாவின் அடையாளம் இந்தி மொழி: அமித் ஷா கருத்துக்கு தயாரிப்பாளர் சி.வி.குமார் கண்டனம்

இந்தி மொழியால் மட்டுமே நாட்டிலுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு, தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “இந்தியா பல்வேறு விதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்.

இன்று, இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியைப் பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும். ஒருமொழியான இந்தியால் மட்டும்தான் மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நிறைவேற்ற முடியும். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவின் இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார், இதுகுறித்து ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

“இந்தியா என்பது 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் கொண்ட ஒன்றியம். ஒருமைத்தன்மை கொண்ட ஒற்றை அரசு அல்ல. பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட பன்முகக் கலாச்சாரத்தில், ஒற்றுமை என்பதுதான் இந்தியா என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது எங்கள் பெருமை, எங்கள் அடையாளம். இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x