

தணிக்கையிலும் லஞ்சம் இருப்பதாக 'ஆண்கள் ஜாக்கிரதை' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.
ராகவா மற்றும் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆண்கள் ஜாக்கிரதை'. முத்து மனோகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களான தயாரிப்பாளர் தாணு, சத்யஜோதி தியாகராஜன, கே.ராஜன், ப்ரவீன் காந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:
எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது மீடூ என்ற விஷயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. திரையுலகில் அனைவரும் முதல் போட்டுப் படமெடுப்பார்கள். ஆனால், இந்தத் தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டுப் படமெடுத்துள்ளார்.
நடிகர்களை வைத்துப் படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்துச் சிறப்பாக எடுத்துள்ளனர். படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும், அதனால் இது வெற்றிப் படம் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் ஒரு காட்சியின் இடையில் நாய் வந்தால் கூட இப்போது தணிக்கையில் பிரச்சினை வருகிறது. மோடி அரசு நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், விலங்குகள் நல வாரியத்தில் சான்றிதழ் வாங்குவதற்குத் தணிக்கையில் லஞ்சம் கொடுக்க வேண்டியதுள்ளது. போன மாதம் கூட ஒரு படத்துக்கு 3 லட்சம் வாங்கினார்கள். விலங்குகள் நல வாரியம் பிரச்சினையைச் சரி செய்வது, படம் எடுப்பதை விடக் கடினமாக உள்ளது. ஆன்லைன் டிக்கெட் பிரச்சினையை நிர்மலா சீதாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால், அதை இப்போது நமது அரசே செய்துள்ளது.
ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்குக் கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் படமெடுக்கும் போது தயாரிப்பாளர்களை மனதில் வைத்துப் படமெடுக்க வேண்டும். ஒரு நாயகனை வைத்துப் படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.