

பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கில் தனுஷை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். தமிழில் ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் நடிக்க போனி கபூர் தனுஷை நாடியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்த போனி கபூர், ஆயுஷ்மான் குர்ரானா நடித்த ‘ஆர்டிகள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கையும் வாங்கியுள்ளார். இந்தப் படத்தில்தான் தனுஷ் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், அதில் அஜித்தை நடிக்கவைக்க முடிவு செய்துள்ள போனி கபூர், அதற்குப் பதிலாக ‘பதாய் ஹோ’ படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ம் தேதி ‘அசுரன்’ படம் ரிலீஸாகிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’, மாரி செல்வராஜ் இயக்கும் படம், ‘ராட்சசன்’ ராம்குமார் இயக்கும் படம், ‘வடசென்னை 2’ என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
எனவே, இந்தப் படங்களை முடித்துவிட்டு ‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.