

'மாஃபியா' படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு இயக்குநர் கார்த்திக் நரேனை ‘நல்ல வொர்க் கண்ணா' என வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் டீஸரை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு. அதற்கு முன்னதாக ரஜினியிடம் 'மாஃபியா' படத்தின் டீஸரைக் காட்டியுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைப் பார்த்துவிட்டு ரஜினி என்னச் சொன்னார் என்பதை இயக்குநர் கார்த்திக் நரேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், "நல்ல வொர்க் கண்ணா.. செமயா இருக்கு. ரொம்ப பிடிச்சது. - இதுதான் 'மாஃபியா' டீஸரைப் பார்த்ததும் ரஜினி சார் சொன்ன வார்த்தைகளைக்கேட்டு நான் மயங்கி விழாமல் இருந்ததற்கு இறைவனுக்கு நன்றி. அவரின் தன்னடக்கத்தைப் பார்த்து வாயடைத்துப் போய்விட்டேன். அவர் தலைவர் என்பதற்கான காரணம் இது" என்று கூறியுள்ளார் கார்த்திக் நரேன்.
தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 'தர்பார்' படத்தில் ரஜினி நடித்து வருகிறார் . இதனால், தான் அந்நிறுவனம் தயாரிக்கும் 'மாஃபியா' படத்தின் டீஸரைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.