

மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் வில்லனாக கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். நீண்ட நாட்கள் கழித்து வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
தற்போது வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார். வர்ஷா பொல்லாமா நாயகியாகவும், வாகை சந்திரசேகர் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பெயரிடப்படாத இப்படத்தின் வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அவரது படங்களின் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
கல்லூரி மாணவருக்கு, கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மதிமாறன்.