

கலைஞர் தொலைக்காட்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பிரபுசாலமன் இருவரையும் நடுவராக கொண்டு தற்போது ஒளிபரப்பாகும் நாளைய இயக்குநர் 6-வது சீசன், இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி தரப்பினர் கூறும்போது, ‘‘சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை முன்வைக்கும் பல குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அரையிறுதிச் சுற்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் அடுத்து ’ஒயில்டு கார்டு’ சுற்று நடக்க உள்ளது.
சிறுகதைச் சுற்று, திகில் சுற்று, குழந்தைகள் சுற்று என பல்வேறு சுற்றுகளில் படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய நிலையில், காதலை மையப்படுத்தியே அரையிறுதிச் சுற்று அமைந்துள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்படங்களின் இயக்குநர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினர்களாக ‘ஜாக்பாட்’ பட இயக்குநர் கல்யாண், நடிகர் கதிர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குறும்படங்கள் மூலம் திறமைகளைக் காட்டி இறுதிச் சுற்றுக்கு செல்லப் போவது யார் என்பது விரைவில் தெரியவரும்.