தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நலன் கருதி ஐசரி கணேசனும், விஷாலும் விலக வேண்டும்: கருணாஸ் பேட்டி

கருணாஸ்: கோப்புப்படம்
கருணாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

பழனி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நலன் கருதி ஐசரி கணேசனும், நடிகர் விஷாலும் சங்கத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும், என நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கருணாஸ் எம்எல்ஏ இன்று (செப்.12) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பது வரவேற்கத்தக்கது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளதை விமர்சிப்பது தவறு. இன்று விமர்சிப்பவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் அவர்களும் முதலீட்டாளர்களை ஈர்க்க வெளிநாடு செல்ல நேரிடும். அப்போது அவர்களை விமர்சிக்க இதுவே வழிவகை செய்துவிடும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தனியாருக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை மீட்டு புதிய கட்டிடம் திறக்கப்படும் நேரத்தில், நாமக்கல்லைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தேர்தல் செல்லாது என ஆதாரமற்ற போலியான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி நீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு தொடர்ந்தவர்கள் எந்தப் பொருளாதார நிலையில் இருப்பவர்கள் என அனைவருக்கும் தெரியும்.

சங்கம் அளிக்கும் உதவித்தொகையை மட்டுமே நம்பியுள்ள உறுப்பினர்கள் தொடுத்துள்ள வழக்குக்கு மணிக்கணக்கில் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்கள் ஆஜராவது எப்படி? அவர்களுக்குக் கொடுக்கப் பணம் எங்கிருந்து வருகிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்களுக்குப் பின்னால் தேர்தலில் போட்டியிட்ட ஐசரி கணேசன் தான் இருக்கிறார் என பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்றால் நடிகர் சங்கக் கட்டிடம் முழுமையடையக் கூடாது, எந்த உறுப்பினரும் பயனடைந்துவிடக் கூடாது என்பது ஐசரி கணேசனின் நோக்கமாக உள்ளதா என்கிற பல கேள்விகளை உருவாக்குகிறது.

ஒருவேளை ஐசரி கணேசனுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே சொந்தப் பிரச்சினை இருக்கும்பட்சத்தில், ஒரு சங்கத்தின் நலனைக் கருதி இருவரும் உடனடியாக ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இல்லையேல் இருவரும் சங்கத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். சங்கம் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. தனிப்பட்ட இருவரின் ஈகோவுக்காக ஒரு சங்கம் முடங்கிக் கிடப்பதை எந்த உறுப்பினரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஐசரி கணேசனும், விஷாலும் உண்மையிலேயே நடிகர் சங்கத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக சங்கக் கட்டிடத்தை முடித்துக் கொடுக்கத் தயாராக வேண்டும். இல்லையேல் அவர்கள் இருவரும் சங்கத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பது உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது,"

இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in