

‘காப்பான்’ கதைத் திருட்டு விவகாரம் குறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா ஜோடியாக சயீஷா நடித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். விவேக் பாடல்கள் எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார் ஹாரிஜ் ஜெயராஜ் மகள் நிகிதா.
இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. வருகிற 20-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘காப்பான்’ படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 12) தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கே.வி.ஆனந்த். அவருடன் பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.
“2012-ம் ஆண்டே இந்தப் படத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர். கதைத் திருட்டு வழக்கு தொடர்ந்த ஜான் சார்லஸ் என்னைச் சந்தித்ததாகச் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை. இந்தப் படம் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி பற்றியதே தவிர, நதிநீர் பங்கீட்டுக்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார் கே.வி.ஆனந்த்.
“கதைத் திருட்டு தொடர்பான புகார்கள், எப்போதுமே பெரிய படங்களுக்கு மட்டுமே வருகின்றன. இதிலிருந்தே அந்தப் புகார்கள் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிகிறது. எங்கள் மீது கதைத் திருட்டு குற்றம் சாட்டிய ஜான் சார்லஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்” என்றார் பட்டுக்கோட்டை பிரபாகர்.