

மிர்ணாளினி ரவி. டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஒரு சிறிய, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, 'ஜிகர்தண்டா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'வால்மீகி'யில், அதர்வாவின் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த கதாபாத்திரம் இது. இந்தப் படம் குறித்தும், தனது நடிப்பு வாழ்க்கை குறித்தும் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு மிர்ணாளினி அளித்த பேட்டியின் தமிழாக்கம்:
''மிர்ணாளினி என்றால் தாமரைக் கொத்து என்று பொருள். என் தந்தையின் பெயர் ரவி. 'வால்மீகி' படத்தின் படப்பிடிப்பில் பலருக்கு என் பெயரை உச்சரிப்பது கடினமாக இருந்தது. மிரு என்று அழைக்கச் சொன்னேன். மிரு என்றால் தெலுங்கில் நீங்கள் என்ற பொருள். 'வால்மீகி' படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் 'புஜ்ஜம்மா' என்பதால் அனைவரும் அதே பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்துவிட்டனர். சரி என நான் கண்டுகொள்ளவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எனக்குத் திரைத்துறை பற்றி எந்த யோசனையும் கிடையாது. என் குடும்பமும் சரி, நண்பர்களும் சரி, யாரும் திரைத்துறை பின்னணியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. நடிகை தேர்வுக்கு என்னை அழைக்கும்போது எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. என் குடும்பத்தில் இருப்பவர்கள் கல்வி சார்ந்து இருப்பவர்கள். யாருக்கும் சினிமா சார்பு கிடையாது.
பொறியியல் படிப்பு முடித்ததும் எனக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நடுவில் எனக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பது, டப்ஸ்மாஷ், டிக் டாக் வீடியோக்கள் பதிவேற்றுவது என்று இருந்தேன்.
டப்ஸ்மாஷ் வீடியோக்களில் என்னைப் பார்த்து பாராட்டி, திரைப்படங்களில் முயற்சி செய்யுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், அப்போது அதையெல்லாம் நான் மனதில் எடுத்துக்கொள்ளவே இல்லை. திரைப்படங்களில் நான் நுழைந்தது அழகிய விபத்து. நான் என் சந்தோஷத்துக்காகச் செய்ததை மற்றவர்களும் விரும்பிப் பகிர்ந்தது ஆச்சரியமளித்தது.
அப்படித்தான் தியாகராஜன் குமாரராஜா என்னை 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கான நடிகை தேர்வுக்கு அழைத்தார். அவர் 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கி, பாராட்டப்பட்ட இயக்குநர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அந்தப் படத்தில் பெரிய பெரிய நடிகர்கள் நடிப்பதும் எனக்குப் பிடித்தது. எப்படியாவது அதில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. மேலும் குமாரராஜா கதை சொன்ன விதமும், அவர் படைப்பாற்றலும், எளிமையும் பிடித்தது.
எனது அடுத்த வேலை என் குடும்பத்தினரை ஒப்புக்கொள்ள வைப்பதாக இருந்தது. ஆரம்பத்தில் அவர்கள் பயந்தனர். என்னுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு வருவார்கள். ஆனால் இப்போது மூன்று படங்கள் நடித்துவிட்டேன். இந்தத் துறை அவ்வளவு மோசமில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்கள். என்னைத் தனியாக விடுகிறார்கள்.
கடந்த மாதம் வரை என் அலுவலகப் பணியில் விடுமுறை எடுத்து வந்து நடித்து வந்தேன். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் வேலைக்குச் சென்று விடுவேன். அடுத்தடுத்து படப்பிடிப்பு இருப்பதால் ஒருவழியாகக் கடந்த மாதம் என் வேலையை விட்டுவிட்டேன். மென்பொருள் பொறியாளராக எனக்கு இப்போது இரண்டை வருட அனுபவம் உள்ளது.
நான் எப்போதுமே கூச்ச சுபாவம் உடையவள். பலநூறு முகங்களுக்கு மத்தியில் கேமராவுக்கு முன் நடிப்பதை நான் அசவுகரியமாக உணர்ந்தேன். ஆனால் 'வால்மீகி' இயக்குநர் ஹரிஷ், மக்களிடம் கவனம் செல்லாமல் நடிப்பில் கவனம் செலுத்தும்படி கூறினார். 'வால்மீகி'யில் நடித்தது இதற்கு முன் நான் நடித்த படங்கள் போல எளிமையாக இல்லை.
வால்மீகி படத்தில்...
என்னில் நானே மாற்றங்களை உணர்கிறேன். கேமராவுக்கு முன் நடிப்பது கொஞ்சம் கொஞ்சமாக சவுகரியமாக இருக்கிறது. தெலுங்கு சினிமா துறையில் இருப்பவர்கள் மிகவும் இனிமையானவர்கள். என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் அதை அப்படியே மறந்துவிட்டு பெங்களூருவில் என் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அங்கு என் குடும்பம், என் நண்பர்கள் மட்டுமே.
நான் வீட்டுக்குச் சென்றால் எனக்கான காஃபியை நானே தயார் செய்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வார். எனக்கென்று உதவியாளர்கள் யாரும் கிடையாது. என்னை அடக்கமாக வைத்திருக்கிறார். திரைப்படங்கள் நடிப்பதற்கு முன் எனக்காக பல வேலைகள் செய்வார். ஆனால் இப்போது எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அது எனக்கு முக்கியம் என நான் நினைக்கிறேன். என் குடும்பத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்".
மிர்ணாளினி தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'சாம்பியன்' படத்தில் நடித்துள்ளார். அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. மேலும் ஒரு தமிழ்ப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிவிக்கிறார்.