Published : 12 Sep 2019 12:18 PM
Last Updated : 12 Sep 2019 12:18 PM

'பிகில்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்.19-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்தப் படத்தில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் எனத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் "ஒவ்வொரு வருடம் நான் இப்படி ஒரு குறிப்பிட்ட நாளுக்குக் காத்திருப்பேன். அன்று என் வேலைகளை ஒதுக்கிவிட்டு, அழைப்பிதழ் பெற்று, இசை வெளியீட்டு விழாவுக்குச் சென்று நம் தளபதியின் பேச்சைக் கேட்பேன்.

இந்த வருடம் அப்படி ஒரு நாளை நானே அறிவிக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. கனவுகள் நிஜமாகும். 19/9/19 விசேஷமான நாளாக இருக்கும். பிகில் இசை வெளியீடு நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான இசையுடனும், சர்வதேசக் கலைஞர்களின் நிகழ்ச்சியுடனும் ஒரு விசேஷமான விழாவைத் திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார் அர்ச்சனா.

'பிகில்' படக்குழுவினரின் இந்த அறிவிப்பு, விஜய் ரசிகர்களைப் பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, இந்தப் படத்திலிருந்து வெளியிடப்பட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று பலரும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் முந்தைய படமான 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் பேச்சில் அரசியல்வாதிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்தப் பேச்சு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. மேலும், படம் வெளியான பிறகும் கூட பொதுமக்களுக்கு இலவசங்கள் வழங்கும் காட்சிக்கு அரசியல்வாதிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையாகி, இறுதியாக அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.

'சர்கார்' அரசியல் கலந்த கதை என்பதால், கொஞ்சம் அரசியல் கலந்து பேசினார் விஜய். ஆனால் 'பிகில்' முழுக்க கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய கமர்ஷியல் படம். ஆகையால் இந்த முறை அரசியல் பேச்சு இருக்காது என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x