’குயின்’ வெப் சீரிஸுக்கு சிக்கல்: ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை

’குயின்’ வெப் சீரிஸுக்கு சிக்கல்: ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை

Published on

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்’ படம் யாரைப் பற்றியது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர்கள் விஜய், பாரதிராஜா, பிரியதர்ஷினி ஆகியோர் முயற்சி எடுத்தனர். இதில், பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா பாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ’குயின்’ என்ற வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரிஸ் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் "’குயின்’ வெப் சீரிஸின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது" என்று 'குயின்' வெப் சீரிஸ் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான ஜெ.தீபக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து 'குயின்' என்ற வெப் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ’தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.

இந்த சூழலில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் ’குயின்’ என்பதை கௌதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு தீபக் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in