

அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு 'பேச்சிலர்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் ஜோஸ், காஷ்மீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. விமர்சன ரீதியாக இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக திவ்ய பாரதி நடிக்கவுள்ளார். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார்.
'பேச்சிலர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இந்தியப் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக "கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்... கமிட் ஆனா உம்முனு இருக்கனும்... Bachelorனா ஜம்முனு இருக்கலாம்...! பேச்சிலர் First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.
'பேச்சிலர்' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சதீஷ் "இது நிஜக்கதை அல்ல. நாயகனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே படம். இதைக் காதல் டிராமா படம் என்று சொல்லலாம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி சாரே இசையமைக்கவுள்ளார்.
இதுவரை நீங்கள் பார்த்த ஜி.வி சாருடைய நடிப்பிலிருந்து இந்தப் படத்தின் நடிப்பு வித்தியாசப்பட்டு இருக்கும். இந்தப் படத்தின் லுக்கே அதை உங்களுக்கு உறுதிப்படுத்தும்.சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இம்மாத இறுதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.
’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்', ''100% காதல்', 'ஜெயில்', 'அடங்காதே', 'காதலிக்க யாருமில்லை', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.