Published : 11 Sep 2019 07:32 PM
Last Updated : 11 Sep 2019 07:32 PM

விஜய் படம் இயக்குகிறேனா? - இயக்குநர் ரமணா விளக்கம்

விஜய் படம் இயக்குவதாக வெளியாகியுள்ள செய்திக்கு இயக்குநர் ரமணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. தீபாவளி வெளியீடாக வெளியாகவுள்ளது.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக விஜய்யுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்தவுடன் மீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ரமணா இயக்கும் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இயக்குநர் ரமணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தற்போது வெளியாகியுள்ள செய்தியில் துளியும் உண்மையில்லை. நான் எந்த ஒரு பொது ஊடகத்திலும் அப்படிக் கூறவில்லை. நான் தற்போது விஜய் அவர்களை வைத்து படம் இயக்குவதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இப்பதிவின் மூலம் ஊடகங்களுக்கும், பொது உலகிற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் தனிப்பட்ட முயற்சியில் படம் இயக்க இருப்பதும் அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருப்பதும் நிஜம். ஆனால், அது விஜய் அவர்களை வைத்து அல்ல. எவர் ஒருவரிடமும் அவர் அனுமதியில்லாமல் பேசவே விரும்பாதவன் நான். அப்படியிருக்க, நடிகர் விஜய் அவர்களுக்கோ, அவரின் புகழுக்கோ தர்மசங்கடத்தை விளைவிக்க இன்றும், என்றும் விரும்ப மாட்டேன். அது விஜய் அவர்களுக்கும் தெரியும்.

இயற்கையும், காலமும் எங்களிடையே அப்படி ஒரு சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் வழங்குமானால் அப்போது அதுகுறித்து நானே அச்செய்தியை வெளியிடும் நேர்மையும், பண்பும் எனக்குண்டு

இவ்வாறு இயக்குநர் ரமணா தெரிவித்துள்ளார்.

'திருமலை' மற்றும் 'ஆதி' என இரண்டு விஜய் படங்களை இயக்கியவர் ரமணா. கேன்சர் பாதிப்புக்கு உள்ளானதால் படம் இயக்குவதிலிருந்து சில காலம் விலகியிருந்தார். தற்போது மீண்டும் படம் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், போக்குவரத்து போலீஸார் இவரைத் தகாத வார்த்தையில் திட்டி சர்ச்சைக்குள்ளானது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x