

வி.ராம்ஜி
1979ம் ஆண்டு, எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழக முதல்வராகிவிட்டார். எனவே எம்ஜிஆர் - சிவாஜி என்பது போய், சிவாஜி மட்டுமே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அதேபோல், எம்ஜிஆர் - சிவாஜிக்கு அடுத்து, கமலும் ரஜினியும் ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகிவிட்டனர்.
எண்பதுகளில்தான் கமலும் ரஜினியும் கொடிநாட்டத் தொடங்கினர் என்றாலும் அதற்கான ஆரம்பக் காலம் என்பது இந்த வருடங்கள்தான்.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ’இமயம்’, ‘கவரிமான்’, ‘திரிசூலம்’, ‘ நல்லதொரு குடும்பம்’, ’நான் வாழ வைப்பேன்’ , ‘பட்டாகத்தி பைரவன்’, ‘வெற்றிக்கு ஒருவன்’ என பல படங்களில் நடித்தார். இவற்றில், ’நான் வாழ வைப்பேன்’, ‘பட்டாகத்தி பைரவன்’, ‘திரிசூலம்’ ஆகியவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, ’பலே பாண்டியா’, ‘தெய்வமகன்’ படங்களைப் போலவே சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த, ‘திரிசூலம்’ வசூலை வாரிக்குவித்தது. திரையிட்ட பல தியேட்டர்களில் ,200 நாட்களைக் கடந்து ஓடியது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப்படத்தை, கே.விஜயன் இயக்கினார்.
கமல், ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘சிகப்புக்கல் மூக்குத்தி’, ‘கல்யாணராமன்’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘மங்களவாத்தியம்’, ‘நீயா’ ஆகிய படங்களில் நடித்தார். இதில், ‘சிகப்புக்கல் மூக்குத்தி’ படமும் ‘மங்களவாத்தியம்’ படமும் படுதோல்வியைச் சந்தித்தன. ‘கல்யாணராமன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பேய், ஆவி கதை என்பதை ஜாலியாகவும் கேலியாகவும், நல்ல ஆவியாகவும் காட்டிய இந்தப் படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. பஞ்சு அருணாசலம் தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குநராக இருந்த ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். இதுதான் இவருக்கு முதல் படம்.
தேவர் பிலிம்ஸின் ‘தாயில்லாமல் நானில்லை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கே.பாலசந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படமும் பாடல்களும் இன்று வரை செம ஹிட். இந்தி ‘நாகின்’ திரைப்படம் தமிழில் ‘நீயா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீப்ரியா தயாரித்து பாம்பாக நடிக்க, துரை இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தது. இவற்றைக் கடந்து, பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்தார் கமல். இதுதான் பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம்.
இதேபோல், ’குப்பத்து ராஜா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘தர்மயுத்தம்’ முதலான படங்களில் நடித்தார் ரஜினி. இதில், ‘அன்னை ஓர் ஆலயம்’ படமும் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ’தர்மயுத்தம்’ தனித்துவமான வெற்றியைப் பெற்றது. ‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார் ரஜினி.
சிவகுமார், ‘என்னடி மீனாட்சி’, ‘ஏணிப்படிகள்’, ‘கடவுள் அமைத்த மேடை’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என படங்களில் நடித்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம்... ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ சிவகுமாருக்கு நூறாவது படம். மிகப்பெரிய வெற்றிப்படம்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘அடுக்குமல்லி’யும் ஸ்ரீதரின் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படமும் வெற்றியைப் பெற்றதும் இந்த ஆண்டில்தான். பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ இந்த வருடம் வெளியானது.
விஜயகாந்த் நடித்த ‘அகல்விளக்கு’, ‘இனிக்கும் இளமை’ என இரண்டு படங்கள் வந்தன. ஆனாலும் பெரிதாக எடுபடவில்லை. ஜெய்சங்கரின் ‘கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன’, ‘ஆடு பாம்பே’, ‘குழந்தையைத் தேடி’ என படங்கள் வந்தன.
விஜயகுமார் நடித்த ‘நீதிக்கு முன் நீயா நானா?’, ‘பகலில் ஓர் இரவு’ என படங்கள் வந்தன. இதில் ‘பகலில் ஓர் இரவு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தவிர, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ படமும் ‘ஓரம்போ ஓரம்போ’ பாடலும் மறக்கவே முடியாது. ‘சக்களத்தி’யும் ‘திசை மாறிய பறவைகள்’ படமும் ’புதிய வார்ப்புகள்’ திரைப்படமும் ‘நிறம் மாறாத பூக்கள்’ படமும் ‘நீச்சல் குளம்’ திரைப்படமும் தனியிடம் பிடித்தன. இதில் மறக்க முடியாத படம் ‘பசி’.
மிக முக்கியமாக, மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ வெளிவந்தது. அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் மீளமுடியாதவை.
இந்த வருடத்தில்தான், ‘அப்போதே சொன்னேன் கேட்டியா’, ‘அன்பே சங்கீதா’, ‘காளி கோயில் கபாலி’, ‘சித்திரைச்செவ்வானம்’, ‘சுப்ரபாதம்’, ‘மாம்பழத்து வண்டு’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என ஜெய்கணேஷ் வரிசையாக படங்கள் பண்ணினார்.
ஆக, 1979ம் ஆண்டில், கமல், ரஜினி, சிவகுமாரைக் கடந்து, ஜெய்கணேஷும் சுதாகரும் அடுத்தது அடுத்தது என படங்கள் பண்ணினார்கள்.