

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் 'நிசப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு,
அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாகமதி’. 2018-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இப்படம் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 'பாகமதி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா வேறெந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
முழுமையாக தன் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹேம்நாத் மதுகார் இயக்கத்தில் உருவாகும் 'நிசப்தம்' படத்தில் ஒப்பந்தமானார். இது வசனமே இல்லாமல் உருவாகும் படமாகும்.
இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட நடிகர்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் அனுஷ்காவுடன் நடித்துள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
தற்போது 'நிசப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. தமிழிலும் இதே பெயரிலேயே வெளியாகவுள்ளது. வசனமே இல்லாத படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.