

வி.ராம்ஜி
‘’வடிவேலு வெறும் காமெடி நடிகர் மட்டுமில்லை. உண்மையிலேயே வடிவேலு, ‘கருப்பு நாகேஷ்’தான்’’ என்று இயக்குநர் வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார்.
‘ஆசை’ படம் வெளியாகி, 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பாக, இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இதையொட்டி, இயக்குநர் வஸந்த் எஸ் சாய், ‘ஆசை’ பட அனுபவங்களை வீடியோ பேட்டியாக ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
‘ஆசை’ படம் பண்ணத் தொடங்கிய போது, ஒருநாள் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் என்னை அழைத்தார். ‘புதுசா ஒரு பையன் வந்திருக்கான். ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். பிரமாதப்படுத்தறான். வேணும்னா அவனை பயன்படுத்திக்கோ’ என்றார். ஆர்.வி.உதயகுமார் சொன்னவர்தான்... வடிவேலு.
அவரைப் பாத்து நானும் மிரண்டுதான் போனேன். ‘ஆசை’ படத்தில் இரண்டு மூன்று காட்சிகள் வைத்திருந்தேன். பிறகு அவரின் நடிப்புக்கு தீனி போடுகிற விதமாக, இன்னும் இரண்டு மூன்று காட்சிகள் வைத்தேன். ‘தேவர்மகன்’ முதலான பல படங்களில், அவருடைய நடிப்பு பிரமிக்கவைக்கும்.
காமெடி பண்ணலாம். சிரிப்பு நடிகர் என்று பேரெடுக்கலாம். ஆனால் காமெடியும் பண்ணிக்கொண்டு, கேரக்டர் ரோலும் செய்து, உடல்மொழியிலும் கவனம் செலுத்துகிற வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான். இயக்குநர் பாரதிராஜா சொன்னது போல, வடிவேலு ‘கருப்பு நாகேஷ்’தான்.
இவ்வாறு வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார்.
இயக்குநர் வஸந்த் எஸ். சாய் அளித்த வீடியோ பேட்டியைக் காண :