

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தது ஏன் என்று இயக்குநர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார் பார்த்திபன்.
ஒரே ஒரு கதாபாத்திரம், ஒரே அறைக்குள் நடக்கும் கதை என உலக அரங்கில் வித்தியாசமான ஒரு முயற்சியை இந்தப் படத்தில் உண்டாக்கி இருக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களிடம் திரையிட்டுக் காட்டி, அவர்களுடைய வாழ்த்துகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று(செப்.11) காலை தனது ட்விட்டர் பதிவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், “மத்தியில் இருக்கை அவருக்கிருந்தும்,மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் மிக எளிமையாக, தன்மையாக உண்மையாக எனக்குச் செவிமடுத்தார்கள்! தமிழ்- தமிழ்நாட்டிலிருந்து உலக அரங்கை நோக்கி நகரும் ஒரு கலைப் படைப்பிற்கு அரசு தரும் அங்கீகாரமென்ன? என் வினா” என்று தெரிவித்துள்ளார்.
எதற்காக மத்திய அமைச்சரைச் சந்தித்தார், அவர் அளித்த பதிலென்ன என்பது குறித்து பார்த்திபனிடம் கேட்ட போது, "'ஒத்த செருப்பு' படத்துக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து வரிச்சலுகை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியைப் படம் பார்க்க வைத்தேன். வரி விவகாரம் உள்ளாட்சித் துறைக்குப் போய்விட்டது என்கிறார்கள். மேலும், ஜி.எஸ்.டி உடன் இணைந்து வருவதால் மத்திய அரசு கடிதமும் வேண்டும் என்கிறார்கள்.
'ஹவுஸ்ஃபுல்' படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தார்கள். ஆனால் தாமதமாகிவிட்டது. ஆகையால், இந்தப் படத்துக்குக் கொஞ்சம் முன்கூட்டியே அணுகலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினேன். இது என் துறை சார்ந்தது இல்லை. ஆனாலும் ஒரு கடிதம் கொடுங்கள். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.
எனது புத்தகங்களைக் கொடுத்தேன். 'ஒத்த செருப்பு' படம் பார்த்தீர்கள் என்றால், அதற்கான தகுதியான படம் தானா என்று புரிய எளிதாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தேன். நேரம் குறைவாகவுள்ளது என்றார். ஆகையால் அவர் கூறியபடியே இன்று (செப்.11) காலை ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன்.
ஒரு விளையாட்டு வீரர் உலக அரங்கை நோக்கிச் சென்றால், அரசாங்கத்தின் சார்பில் நிறைய ஊக்கம் அளிக்கப்படுகிறது. அது ஒரு சினிமா கலைஞனுக்கு இருப்பதில்லை. இந்தப் படம் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கும் குழுவுக்குள் சென்றுள்ளது. அது தேர்ந்தெடுக்கப்படும்போது, அரசு சார்பில் தான் அனுப்பப்படும்.
இதற்கு அரசுத் தரப்பில் என்ன விதமான அங்கீகாரம் கிடைக்கும் எனக் கேட்டுள்ளேன். இதனை நீங்கள் முன்கூட்டியே எனக்குக் கொடுத்தால், மக்கள் மத்தியில் ஒரு கவன ஈர்ப்பு ஏற்படும் என்று எழுதியுள்ளேன்" என்று இயக்குநர் பார்த்திபன் தெரிவித்தார்.