

தனக்கு அரசியல் எண்ணமோ, அரசியல்வாதியாகும் ஆசையோ இல்லை என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
ட்விட்டரில் மத்திய அரசை, பிரதமர் மோடியை விமர்சிக்கும் பல்வேறு நட்சத்திரங்களில் சித்தார்த்தும் ஒருவர். அரசியல் தொடர்பாக பாலிவுட்டிலிருந்து பல குரல்கள் வந்தாலும் தென்னிந்திய சினிமாவிலிருந்து வரும் ஒரு சில குரல்களில் சித்தார்த்தின் குரலும் உள்ளது.
இப்படி ட்விட்டரில் அரசியல் சம்பந்தமாகத் தொடர்ந்து பதிவிடுவதைத் தாண்டி மக்களிடம் அபிப்ராயங்களை ஏற்படுத்த முடியுமா என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சித்தார்த்திடம் கேட்கப்பட்டது.
இதற்கு, "இதுதான் வேடிக்கையான விஷயம். நினைத்ததைப் பேசாத நூற்றுக்கணக்கானவர்களிடம் (நடிகர்களிடம்) இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை. ஏன் இந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று அவர்களை யாரும் கேட்பதில்லை. வெளிப்படையாகப் பேசும் ஒருவனிடமே ஏன், இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. அது முறையற்றது என நினைக்கிறேன்.
நான் இருக்கும் இடத்திலிருந்து இது சுலபம் என்று நினைக்கிறீர்களா? நிறைய கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆனாலும் இன்னமும் செய்ய வேண்டும் என்கிறீர்களா? இன்னமும் என்றால் எவ்வளவு? எனக்கு அரசியல்வாதியாகும் எண்ணமில்லை. எனக்கு அரசியலும் வேண்டாம். அப்படி இருந்தால் என்னால் முரண்பாடின்றி கருத்து தெரிவிக்க முடியாது. அதனால் இதுதான் அதிகபட்சம் என்னால் செய்ய முடிவது" என்று சித்தார்த் கூறியுள்ளார்.