

சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால், ‘ஜிப்ஸி’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்க தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
காரைக்கால், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல படங்களிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கான விளம்பரப் பாடலில், நல்லகண்ணு, பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி, பாலபாரதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கைச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தனர். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ‘பல காட்சிகளை நீக்க வேண்டியதிருக்கும். ஆகையால், நீங்கள் இரண்டாம் கட்ட தணிக்கைக்குழுவுக்குச் சென்றுவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கெளதமி தலைமையிலான தணிக்கைக்குழுவினர் படம் பார்த்தனர். ‘பல காட்சிகளை நீக்க வேண்டியதிருக்கும். அப்படி நீக்கினால் படத்தின் கதையையே மாற்ற வேண்டியதிருக்கும்’ என்று அவர்கள் சொன்னதோடு, ‘நீங்கள் TRIBUNAL-க்குச் சென்றுவிடுங்கள்’ எனத் தெரிவித்தனர்.
ஆனால், TRIBUNAL சென்றால் பட வெளியீட்டுக்கு 3 மாதங்களாகும். இதனால், படத்தில் ஆட்சேபம் தெரிவித்த மற்றும் நீக்கம் செய்யப்பட பரிந்துரைத்த காட்சிகளை தணிக்கைக் குழுவிடம் இருந்து வாங்கி, படத்தின் கதைக்களம் மாறாத வகையில் கதாபாத்திரங்களின் பெயரை மாற்றலாம், எப்படி காட்சிகளை மாற்றி அமைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
'ஜிப்ஸி' தணிக்கை குறித்து சமீபத்தில் எஸ்.வி.சேகர் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.