’’இப்பவும் அப்பவும் ஒரே அஜித்; அவர் மாறவே இல்லை’’ - ‘ஆசை’ இயக்குநர் வஸந்த் எஸ் சாய் பிரத்யேகப் பேட்டி

’’இப்பவும் அப்பவும் ஒரே அஜித்; அவர் மாறவே இல்லை’’ - ‘ஆசை’ இயக்குநர் வஸந்த் எஸ் சாய் பிரத்யேகப் பேட்டி
Updated on
2 min read

வி.ராம்ஜி


‘’இப்பவும் அப்பவும் ஒரே அஜித்தாகவே இருக்கிறார். அவர் மாறவே இல்லை. அவரின் இயல்பே அப்படித்தான்’’ என்று இயக்குநர் வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார்.


இயக்குநர் மணிரத்னம் தயாரித்து இயக்குநர் வஸந்த் இயக்கி, அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் நடித்த ‘ஆசை’ படம் வெளியாகி 25ம் ஆண்டு தொடங்குகிறது.


இதையொட்டி, அந்தப் படத்தின் இயக்குநரான வஸந்த் எஸ் சாய்க்கு, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகமாக வீடியோ பேட்டி அளித்தார், இயக்குநர் வஸந்த் எஸ் சாய்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:


’ஆசை’ படம், அஜித்தின் கேரியரில் முதல் வெற்றிப் படம். அதுமட்டும் அல்ல... அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் ஆகிய மூவருக்குமே அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு மிகவும் உதவியாக இருந்த படம். அவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கே கூட ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் பண்ணுவதற்கும், உண்மைத்தன்மையுடன் கூடிய கமர்ஷியல் படங்கள் பண்ணுவதற்கும் என்னை நகர்த்திய படம் என்றுதான் ‘ஆசை’யைச் சொல்லவேண்டும்.


‘அமராவதி’ பார்த்தோ, அடுத்த படமான ‘பவித்ரா’ பார்த்தோ அஜித்தை ‘ஆசை’ படத்துக்கு புக் செய்யவில்லை. ஒரு வேஷ்டி விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். அதைப் பார்த்ததுமே என்ன ரொம்பவே ஈர்த்தார்.


இந்தப் படம் வந்த காலகட்டத்தில், அழகன் என்றாலே அரவிந்த்சாமியைத்தான் எல்லோரும் சொல்லுவோம். மணிரத்னம் அரவிந்த்சாமியைக் கொண்டு வந்தது போல, நாமும் அரவிந்த்சாமிக்கு இணையாக ஒரு நடிகராக இந்த அஜித்தைக் கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்தேன்.
அஜித் நடித்த முதல் படமான ‘அமராவதி’யும் அடுத்த படமான ‘பவித்ராவும்’ சரியாகப் போகவில்லை. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை. இயக்குநர் மணிரத்னமும் அவரின் நண்பர் எஸ்.ஸ்ரீராமும் இணைந்து ‘ஆலயம்’ எனும் கம்பெனியைத் தொடங்கியிருந்தார்கள். அந்தக் கம்பெனிக்குப் படம் பண்ணும்படி என்னை அழைத்தார் மணிரத்னம். ‘ஹீரோ சப்ஜெக்ட் எடுத்துப் பண்ணேன். நல்லாருக்கும்’ என்றார். அஜித்தை வைத்து ‘ஆசை’ உருவானது இப்படித்தான்.


அஜித் அவ்வளவு அழகு. ஹேண்ட்ஸம்மான மனிதர். இன்றைக்கு அஜித்தைப் பற்றி வருவதெல்லாம் பாஸிடீவ்வான செய்திகள். எல்லோரும் ‘தல தல’ என்று கொண்டாடுகிறார்கள். இன்றைக்கு ‘தல’ என்று மிகப்பெரிய உயரம் தொட்டிருக்கும் அஜித்தின் வளர்ச்சியும் அவரின் பண்பும் குணமும் அன்றைக்கே நான் பார்த்து வியந்ததுதான்.


‘அமராவதி’ படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்த போது, ‘ஆசை’ படத்துக்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட ‘ஆசை’ படத்தில் அஸோஸியேட் டைரக்டர் போல் படத்தில் எல்லா வேலைகளையும் பார்த்தார் அஜித். அப்போது பட ஷூட்டிங்கிற்கு பைக்கில்தான் வந்துகொண்டிருந்தார். ‘ஆசை’ பட வேலைகள் முடியும் தருணத்தில்தான் ‘1626’ என்ற நம்பர் கொண்ட கார் வாங்கினார் அஜித்.
இன்றைக்கு ‘ஆசை’ படம் பற்றி யோசிக்கிற போது, 25 வருடங்களுக்கு முன்னாலேயே அஜித்தைத் தெரியும். அவரை வைத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதும் அவருடைய பண்பு, கேரக்டரெல்லாம் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது என்பதும் என நினைக்கவே பெருமையாக இருக்கிறது.


இவ்வாறு இயக்குநர் வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார்.


இயக்குநர் வஸந்த் எஸ் சாய் வழங்கிய வீடியோ பேட்டியைக் காண...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in