

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வனிதா மற்றும் லாஸ்லியா நடந்துகொண்ட விதம் பற்றி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.
விஜய் டிவியில் கடந்த 77 நாட்களாக ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில், கவின், தர்ஷன், முகின் ராவ், சாண்டி, ஷெரின், லாஸ்லியா, வனிதா ஆகிய 7 பேரும் தற்போது போட்டியாளர்களாக உள்ளனர். இதில், வனிதா வைல்ட் கார்ட் மூலம் மறுபடியும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (செப்டம்பர் 8) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், சேரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்த சிலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பா ஸ்தானத்தில் இருந்த சேரன் வெளியேற்றப்பட்டதால், லாஸ்லியா குலுங்கி குலுங்கி அழுதார்.
அதேநேரத்தில், சேரனின் வெளியேற்றத்துக்காக வனிதாவும் அழுதது பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் கிண்டல்களும் வைக்கப்பட்டுள்ளன.
நடிகையும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏற்கெனவே கலந்து கொண்டவருமான காயத்ரி ரகுராம், வனிதா மற்றும் லாஸ்லியாவின் அழுகை குறித்து ட்விட்டரில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். “கண்ணீர் வராமல் அழுவது எப்படி என நான் கற்றுக்கொள்ள வேண்டும். மிகச்சிறந்த திறமை. சத்தமும் ஆக்ஷனும் இருந்ததே தவிர, கண்ணீர் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
அவரின் இந்தக் கிண்டல் பதிவு வனிதாவைக் குறிப்பிடுகிறது எனச் சிலரும், லாஸ்லியாவைக் குறிப்பிடுகிறது எனச் சிலரும் பதிவிட்டுள்ளனர்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது.