

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்த உருவக் கேலிக்கு நடிகை ஸ்ரீப்ரியா கடும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சிறு குழந்தைகளுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், இளைஞர்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள். தற்போது இளைஞர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதனை மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது சகஜமாக நடைபெறும். ஆனால், போட்டியாளர்கள் சிலரை உருவங்களை வைத்துக் கேலி செய்வதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இது தொடர்பாக நடிகர் ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில், "நேரம் கிடைக்கும் சமயங்களில் நான் அதிகம் பார்ப்பது விஜய் தொலைக்காட்சி தான். அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவக் கேலி அதிகம் வருவது சோகம்... மாற்றிக்கொள்வார்களா? ஒருவரைக் கேலி செய்து காமெடி செய்வது கேவலம்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒருவரின் மூக்கை கேலி செய்வது, எடையைக் கேலி செய்வது சரியில்லை. மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை. நீங்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளுங்கள். மற்றவரைக் கேலி செய்து அசிங்கப்படுத்துவதற்கான உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? உருவக் கேலியை எதிர்ப்போம்.
எனது ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்பவர்கள், உருவக் கேலியை எதிர்ப்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும். நான் பல முறை உருவக் கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன். இதைப் போலக் கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாகக் கடிந்திருக்கிறேன். உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீப்ரியா.