

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். த்ரிஷாவையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படம் என்றாலே பிரம்மாண்டமான அரங்குகள் எல்லாம் அமைக்கும் பணிகள் இருக்கும். இதனால் படத்தின் கலை இயக்குநர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து விசாரித்த போது, படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதைப் படக்குழு உறுதி செய்தது.
டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று தான் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.