Published : 09 Sep 2019 10:28 AM
Last Updated : 09 Sep 2019 10:28 AM

பிக் பாஸ் சர்ச்சை: மன்னிப்பு கோரிய சாக்‌ஷி அகர்வால்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, சாக்‌ஷி அகர்வால் மன்னிப்பு கோரியுள்ளார்

பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடக்கும் நிலையில், இதற்கு முன் 2 சீசன்களில் இல்லாத வகையில் பிக் பாஸ் 3 தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் புகார் அளித்தன. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

போட்டியாளர்களிடையே சுவாரஸ்யத்தைக் கூட்ட திடீரென வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சாக்‌ஷி, மோகன் வைத்தியநாதன், அபிராமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். வனிதாவுக்கு - ஷெரினுக்கு ஏற்பட்ட பிரச்சினையில் ஷெரின் அழுதார். அப்போது, சாக்‌ஷி சமாதானப்படுத்தும் நோக்கில், "வனிதா உன் மீதுள்ள அக்கறையில் சொல்கிறார். உன் ஈர்ப்பை தர்ஷன் பயன்படுத்தி அவர் வென்றுவிடுவார். நீ இங்கு நினைப்பது எல்லாம் சரி அல்ல. வெளியில் உன்னைப் பற்றி வேறு விதமாகப் பதிவாகிறது'' என்றார்.

''யாரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. எனக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள வனிதா ஒரு கருத்தை உருவாக்க முயல்கிறார்'' என்று கூறியபடியே ஷெரின் அழுதார். அப்போது சாக்‌ஷி, ''நீ ஏன் அதைப்பற்றிக் கவலைப்படுகிறாய். தெருவில் ஆயிரம் நாய்கள் குரைக்கும். அதை எல்லாம் கண்டு பயப்பட முடியுமா?'' என்று கேட்டார். ''வனிதா என் தோழி. அவரை எப்படி நாய் என்று சொல்ல முடியும்?'' என்றார் ஷெரின். அப்போது சாக்‌ஷி கூறிய வார்த்தைகள் நெட்டிசன்களைக் கோபப்படுத்தியது. ''நான் வனிதாவைச் சொல்லவில்லை. பொதுமக்களை (பப்ளிக்கை) சொன்னேன் என்றார். சாக்‌ஷியின் இந்த வார்த்தைகளால் சமூக வலைதளத்தில் அதிகம் எதிர்ப்பு எழுந்தது. பலரும் அவரை கடுமையாகத் திட்டத் தொடங்கினர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில், "அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும், எனது வார்த்தைகள் உங்கள் உணர்வைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது அறிக்கை பார்வையாளர்களைப் பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாகத் தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து எனக்கு ஆதரவளிக்கவும்" என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x