

'தர்பார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதி மும்பையில் தான் காட்சிப்படுத்தியுள்ளனர். தற்போதும் படப்பிடிப்பு மும்பையில் தான் நடைபெற்று வருகிறது.
இதுவரை ஃபர்ஸ்ட் லுக், 2 புகைப்படங்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதால் டிசம்பரிலிருந்து தான் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, 'தர்பார்' படத்தை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. ஆனால், சூர்யாவை இயக்க சிவா ஒப்பந்தமாகிவிட்டதால் உடனடியாக ரஜினியை இயக்க அவரால் முடியவில்லை. இதனால், ரஜினியின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸே இயக்க பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டுள்ளது. ரஜினியிடம் அவர் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, அவரும் ஒ.கே சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் பட்சத்தில் அந்தப் படத்தையும் நாங்களே தயாரிக்கிறோம் என்று லைகா நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் ஒப்பந்தத்தில் முடிவடையும் என்று படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.