

'விஸ்வாசம்' படத்தின் வசூல் சர்ச்சை ஆரம்பமானதைத் தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் விளக்கம் அளித்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, யோகி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டது. 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினி நடித்த 'பேட்ட' படத்துக்குப் போட்டியாக இந்தப் படமும் வெளியானது.
இரண்டு படங்களுமே வசூல் போட்டியில் சிக்கியது. தமிழகத்தில் 70 கோடி வசூல், 100 கோடி வசூல், 100 கோடியைக் கடந்த வசூல் என்றெல்லாம் சமூக வலைதளத்தில் பலரும் ட்வீட் செய்து வந்தார்கள். ஆனால், 'பேட்ட' படக்குழுவோ தங்களுடைய படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக இப்போது வரை வெளியிடவே இல்லை. ஆனால், 'விஸ்வாசம்' படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமோ தங்களுடைய படத்தின் மொத்த வசூல் 125 கோடியைத் தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது.
இந்நிலையில், முன்னணி விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் தனியார் யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "கதாநாயகர்களைச் சந்தோஷப்படுத்தவே இம்மாதிரியான வசூல் விவரங்களை வெளியிடுகிறார்கள். சமீபத்தில் 2 பெரிய நடிகர்களுடைய படம் வெளியானது. இரண்டு ரசிகர்களுக்குமே போட்டி. உடனே ஒருவர் 100 கோடி என்று போடுகிறார், இன்னொருவர் 125 கோடி எனப் போடுகிறார்.
அப்போது தயாரிப்பாளரிடம் கொண்டு போய் வசூலை 80 கோடி எனக் கொடுக்கிறார். அதற்குத் தயாரிப்பாளர் 'என்னப்பா 150 கோடி எனப் போட்டிருந்த' என்று கேட்டவுடன் "நான் என்ன சார் பண்ணட்டும்.. ரசிகர்கள் எல்லாம் கேட்கிறார்கள் என்பதற்காகப் போட்டேன். உண்மையான கலெக்ஷன் இவ்வளவு தான்" என்று சொல்லியிருக்கிறார்." என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.
விஜய் ரசிகர்களோ இவர் கூறுவது அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தைத் தான் என்று குறிப்பிட்டார்கள். இதனைத் தொடர்ந்து ’பேட்ட - விஸ்வாசம்’ வசூல் பிரச்சினை, அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையாக உருவெடுத்தது. இரண்டு தரப்புமே இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
தாங்கள் வெளியிட்ட 'விஸ்வாசம்' படத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், "பொங்கலுக்குத் திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதைப் பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. Happy Diwali folks!" என்று தெரிவித்துள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் இந்த ட்விட்டர் பதிவு, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.