

வி.ராம்ஜி
‘அமராவதி’ படத்தில் அறிமுகமான அஜித்துக்குக் கிடைத்த முதல் வெற்றிப்படம் ‘ஆசை’. 95ம் ஆண்டு படம் வெளியானது. படம் வெளியாகி 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘ஆசை’ திரைப்படம்.
சோழா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், செல்வா இயக்கிய படம் ‘அமராவதி’. இந்தப் படம்தான் அஜித்தின் முதல் படம். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனாலும் படத்தில் நடித்த அஜித்தைப் பார்த்துவிட்டு, ‘யார் இது’ என்று ரசிகர்கள் கேள்விகேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து இயக்குநர் கே.சுபாஷ் இயக்கத்தில், அஜித் நடித்த இரண்டாவது படம் ‘பவித்ரா’. ’அமராவதி’யில் சங்கவிதான் ஹீரோயின். ‘பவித்ரா’ படத்தில் கதையின் நாயகி, டைட்டிலின் நாயகி எல்லாமே ராதிகாதான். இதில் அஜித்துக்கு ஜோடி கீர்த்தனா. இந்தப் படமும் வெற்றியைப் பெறவில்லை.
இந்த சமயத்தில்தான், இயக்குநர் மணிரத்னமும் அவரின் நண்பர் எஸ்.ஸ்ரீராமும் இணைந்து படக்கம்பெனியை தொடங்கியிருந்தார்கள். அந்த கம்பெனியின் மூலம் படம் ஒன்றை இயக்க, இயக்குநர் வஸந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்காக, வஸந்த் சொன்ன கதை மணிரத்னத்தை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. கதைக்கு ஹீரோ யார் என்று மணிரத்னம் கேட்க, ‘அஜித்’ என்றார் வஸந்த். ‘அஜித்?’ என்று அழுத்தமாகக் கேட்டார் மணிரத்னம்.
‘அமராவதி’ படம் வருவதற்கு முன்பு, இயக்குநர் வஸந்த், வேஷ்டி விளம்பரம் ஒன்றைப் பார்த்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் வரும் இளைஞர் வெகுவாகக் கவர்ந்துவிடவே, ‘அடுத்த படம் பண்ணும் போது, இந்த இளைஞரை சினிமாவுக்குள் கொண்டுவரவேண்டும்’ என ஆசைப்பட்டார். ஆனால், அதற்குள், ‘அமராவதி’யும் ‘பவித்ராவும்’ வந்துவிடவே, இயக்குநர் வஸந்த், அஜித்தை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை, ‘ஆசை’ மூலம் நிறைவேறியது.
அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகிணி, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பூர்ணம் விஸ்வநாதனுக்கு ரோகிணி, சுவலட்சுமி என இரண்டு மகள்கள். இவர்களில் ராணுவத்தில் பணிபுரியும் பிரகாஷ்ராஜ், ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டு டில்லியில் இருப்பார். பூர்ணம் விஸ்வநாதனும் சுவலட்சுமியும் சென்னையில் இருப்பார்கள்.
அங்கே துறுதுறு இளைஞன் ஜீவா கதாபாத்திரத்தில் அஜித், எல்லா வயதினரையும் கவர்ந்தார். நாயகி யமுனா கேரக்டரில் சுவலட்சுமி. இருவருக்கும் காதல். ஒருவர் மீது ஒருவர் ஆசைப்படுவார்கள். காதல் ஆசை. அதேசமயம், மனைவியின் தங்கையைப் பார்த்ததும் பிரகாஷ்ராஜுக்கு சபலம். ஆசை. இங்கே ஆசையாக காமம்.
ஒருகட்டத்தில், சுவலட்சுமியை அடைவதற்காக, மனைவியையே கொலைசெய்வார் பிரகாஷ்ராஜ். கைக்குழந்தையுடன் இருக்கும் பிரகாஷ்ராஜ் மீது பூர்ணம் விஸ்வநாதனுக்கு கரிசனம். மரியாதை. அன்பு. சுவலட்சுமியின் காதல் பிரகாஷ்ராஜூக்கு தெரியவரும்.
அதன்பின்னர், பூர்ணம் விஸ்வநாதனுக்கும் சுவலட்சுமிக்கும் அஜித்தை கெட்டவனாகக் காட்டுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் அனைத்தும் பகீர் ரகம். போதாக்குறைக்கு, அஜித்தை வைத்து டிராமா, கைக்குழந்தையை வைத்து டிராமா, கடன் கொடுத்தவனை வைத்து டிராமா என்று அசால்ட்டாக வில்லத்தனங்களை செய்துகொண்டே இருப்பார்.
ஒருகட்டத்தில், அஜித்துக்கு சகலமும் தெரியவர, அவர், ஒருபக்கம் தன் காதலியிடம் தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயம். இன்னொரு பக்கம், பிரகாஷ்ராஜின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த வேண்டிய அவசர அவசியம். இந்தத் தவிப்பையும் கோபத்தையும் வெகு அழகாகக் காட்டியிருப்பார் அஜித்.
இறுதியில், பூர்ணம் விஸ்வநாதனுக்கு மாப்பிள்ளையின் சூழ்ச்சிகள் தெரியவரும். அப்போது, சாது மிரண்டால் என்ன நடக்குமோ அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். பிரகாஷ்ராஜைக் கொல்லுவதற்கு பூர்ணம் விஸ்வநாதன் செய்யும் காட்சியில், தியேட்டர் மொத்தம் அப்படியொரு கைத்தட்டலை வழங்கி, கிடுகிடுக்கச் செய்தது. அது பிரகாஷ்ராஜ் மீதிருந்த கோபம். அந்தக் கேரக்டர் மீது வந்த ஆத்திரம். அவற்றின் வெளிப்பாடுதான் அந்தக் கைத்தட்டல்.
கி.மு., கி.பி. என்பது போல, ஆசைக்கு முன், ஆசைக்குப் பின் என்று தேவாவின் இசையைச் சொல்லலாம். ‘ஆசை’ படத்துக்கு தேவா போட்ட டியூன்கள் எல்லாமே வேற லெவல். அதுவரை வழக்கமான மெட்டுகளும் டியூன்களும் போட்டு பாடல்களை ஹிட்டாக்கி வந்த தேவா, இந்தப் படத்தில் இப்படியொரு இசையைத் தருவார் என்று எவருமே நினைக்கவில்லை. ‘புல்வெளி புல்வெளி’, என்றொரு பாடல், ‘திலோத்தமா’ என்றொரு பாடல். ’கொஞ்சநாள் பொறு தலைவா’, ‘மீனம்மா’ என்று எல்லாப் பாடல்களுமே சூப்பர்டூப்பர் ஹிட்டாகின.
அஜித்துக்கு இது மூன்றாவது படம். ‘அமராவதி’, ‘பவித்ரா’ என இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, முதன்முதலாகக் கிடைத்த வெற்றிப்படம்தான் ‘ஆசை’. அதேபோல் ‘கேளடி கண்மணி’தான் இயக்குநர் வஸந்துக்கு முதல் படம். அடுத்து ‘நீ பாதி நான் பாதி’ இரண்டாவது படம். மூன்றாவதாக ‘ஆசை’. இந்தப் படத்தின் வெற்றி, அஜித்தையும் வஸந்தையும் சுவலட்சுமியையும் பிரகாஷ்ராஜையும் யார் யார் என திரையுலகமே திரும்பிப் பார்த்தது.
95ம் ஆண்டில் வெளியானது ‘ஆசை’. அந்த வருடம், செப்டம்பர் மாதம் 8ம் தேதி படம் வெளியானது என்றும் 9ம் தேதி வெளியானது என்றும் சொல்லப்படுகிறது. எதுஎப்படியோ... 24 ஆண்டுகள் முடிந்து, 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘ஆசை’.
அஜித்தின் முதல் ஹிட்டான ‘ஆசை’யை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிடமுடியாது.