Published : 08 Sep 2019 09:18 AM
Last Updated : 08 Sep 2019 09:18 AM

திரை விமர்சனம் - சிவப்பு மஞ்சள் பச்சை

எதிரும் புதிருமாக முட்டிக் கொள்ளும் இரண்டு கதாநாய கர்கள் உண்மை உணர்ந்து, ஈகோ தகர்ந்து, இணையும் கதை.

சாலை விதிகளை சட்டைசெய் யாமல் பறக்கும் ஜி.வி.பிரகாஷ், ஒரு பைக் ரேஸர். லிஜோமோல் ஜோஸ் அவரது ஒரே அக்கா. பெற் றோரை இழந்து ஒரே குடையின் கீழ் வளர்ந்த இருவரும் ‘பாசமலர்’ வாழ்க்கை வாழ்கிறார்கள். அக்கா வின் வாழ்க்கையில் ஒரு ராஜகுமா ரன்போல நுழைகிறார் போக்கு வரத்து சார்ஜன்ட்டான சித்தார்த். பைக் ரேஸருக்கும், போக்குவரத்து சார்ஜன்ட்டுக்கும் ஏற்கெனவே முட்டல், மோதல். மூவரையும் முக் கோணப் புள்ளிகளில் இணைக் கிறது வாழ்க்கைச் சக்கரம். அதன் சுழற்சியில் வெளிப்படும் பாசம், நேசம், வெறுப்பு, காதல், பரிவு, பிரிவு, சோகம், கோபம், புரிதல் ஆகிய உணர்வுகளின் சங்கமம் தான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.

இரண்டு முதன்மைக் கதாபாத் திரங்கள் எதிரிகளாக இருந்து, பின் னர் ஒன்றிணையும் பல திரைப்படங் கள் வந்திருக்கின்றன. இதில் ஜி.வி. பிரகாஷ் சித்தார்த் காம்பினேஷன் துடிப்பும், துள்ளலும் நிறைந்த இளமைக் கூட்டணியாக வசீகரிக் கிறது. படம் நெடுகிலும் இவ்விரு கதாநாயகர்களின் கவன ஈர்ப்பு மாயம் செய்தாலும் அக்கா - தம்பி இடையிலான பாசமும், அதன் நீட்சி யாக வெளிப்படும் விட்டுக்கொடுத் தலும் பார்வையாளர்களின் மன துக்குப் புத்துணர்வு அளிக்கிறது.

கதாபாத்திரங்களுக்கு இடையி லான உறவு நிலையைப் பிடிமானத் துடன் சித்தரிக்க வேண்டுமானால் வாழ்க்கையைத் தொட்டுக்காட்டி காட்சிகளை உணர்வுப்பூர்வமாக அமைக்க வேண்டும். அக்காட்சி களில் வலுவான காரணங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேவையில் சிறிதும் பிசகாமல், ஜி.வி.பிரகாஷ் - லிஜோ மோல் இடையிலான பாசப் பிணைப்பை பார்வையாளர்கள் மனதில் அழுத்த மாக பச்சை குத்திவிடுகிறது படத்தின் தொடக்கக் காட்சிகளாக வரும் சின்னச் சின்ன ஃபிளாஷ்பேக்குகள்.

‘‘அவ எனக்கு அம்மா.. நா அவ ளுக்கு அப்பா’’ என்று சிறுவனாக இருக்கும் ஜி.வி. சொல்லும் வச னம் மிகையாகவோ, சினிமாத் தனமாகவோ இல்லாமல் காட்சி களின் வழியே அர்த்தப்பூர்வமாக நிறுவப்படுகிறது. இதனால் லிஜோ மோல் தன் மனதுக்குப் பிடித்தவரை தம்பிக்காக மறக்கத் துணியும் கட்டத்தை உறுத்தல் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அக்கா தம்பியின் பாசம் மட்டு மல்ல; திரைக்கதையின் முக்கிய திருப்பங்கள் அனைத்தும் வலு வான காரணங்களுடன் நகர்வது திரைக்கதையின் பெரிய பலம். அதேபோல, இந்தப் பாசத்தைப் புனிதப்படுத்தாமல் தம்பியின் எதிர்ப்பை மீறி தன் காதலருடன் லிஜோமோல் இணைவதாகக் காண்பித்திருப்பதும் இயக்குநரின் முதிர்ச்சியான அணுகுமுறைக்குத் திடமான அடையாளம்.

முதல் பாதியில் சித்தார்த் - ஜி.வி. பிரகாஷ் இடையிலான மோதல் காட்சிகள் பரபரப்பு விரும்பிகளுக் கான ஆக்‌ஷன் ட்ரீட். சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஆபத் தாக விளையாடும் பைக் ரேஸ் களின் பின்னணியில் நடக்கும் விபரீதமான பந்தயங்களையும், அவற்றுக்காக உயிரை பணயம் வைத்து சாகசம் செய்யும் பைக் ரேஸர்களின் அசட்டு வாழ்க்கை யையும் விறுவிறுப்பான காட்சிகளா கப் படையல் வைத்திருக்கிறார் இயக்குநர்.

சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் இடை யிலான மோதலின் வழியே பைக் ரேஸிங் என்ற சமூகவிரோதச் செய லுக்கு எதிரான செய்தி, பிரச்சார நெடி இல்லாமல் உணர்த்தப்பட் டிருக்கிறது. பைக் ரேஸிங் பின்னால் இருந்து இயக்கும் வலைபின்னலை மெலிதாகக் கோடிகாட்டிவிட்டு நகர்ந்துகொள்கிறது திரைக்கதை. இதுபற்றி விரிவாகக் காட்சிப் படுத்தி, அதனை முற்றாக துடைத் தெறியும் பாதையில் சித்தார்த் தும், ஜி.வி.யும் இணைந்து பய ணித்திருக்க வேண்டிய சுவாரஸ்ய மான ஒரு திரில்லர் சரடுக்கு இரண் டாம் பாதியில் வாய்ப்பு இருந்தும், அதைத் தவிர்த்துவிட்டு, ஒரு போதைப்பொருள் கோணத்தை இணைத்திருப்பது ஒரு திணிப்பைப் போல தெரிவதால் சற்று ஏமாற்றம் அளிக்கிறது.

கடைசி இருபது நிமிடங்களில் பரபரப்பான சண்டைக் காட்சிக்கு இடையே சில நெகிழ்ச்சியான தருணங்கள் இருந்தாலும், அந்தப் பகுதி தேவைக்கும் சற்று அதிகமாக நீளும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சித்தார்த் - லிஜோமோல் காதல் காட்சிகள் பரவசத்தையும், ஜி.வி - காஷ்மீரா இடையே முகிழும் காதல் கலகலப்பையும் அளிக்கின்றன.

துணிச்சலான காவல் அதிகாரி யாகவும், அன்பான கணவனாகவும் கச்சிதமாகப் பொருந்துகிறார் சித்தார்த். அதேபோல, இறக்கை முளைத்துவிட்ட உணர்வுடன் கூடிய துடுக்கும், கண்களில் புடைக்கும் ஈகோவுமாக நடித்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இதுவரை நடித்தவற்றில் இது அவருக்குப் பேர் சொல்லும் படமாக இருக்கும்.

அறிமுகக் கதாநாயகியான லிஜோமோல் ஜோஸுக்கு, குடும் பப் பாங்கான முகம், கண்ணியமான உடல்மொழி இரண்டும் பிளஸ். அவற்றை சிறப்பான நடிப்பால் இன்னும் மிளிரச் செய்கிறார்.

துணைக் கதாபாத்திரங்களில், லிஜோமோல் ஜி.வி.பிரகாஷுக்கு ஆதரவு காட்டும் அத்தையாக நடித் திருப்பவர் கவனம் ஈர்க்கிறார். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். சித்தார்த்தின் அம்மாவாக வரும் தீபா ராமானுஜம், அண்ணனாக வரும் பிரேம் குமார் ஆகியோரும் மனதில் தங்கிவிடுகிறார்கள்.

புதுமுக இசையமைப்பாளர் சித்து குமாரின் பாடல்கள் கேட்கும் படியும், பின்னணி இசை துருத்தித் தெரியாமலும் அமைந் திருக்கின்றன.

போக்குவரத்துக் காவலர்களுக் கும், பைக் ரேஸர்களுக்குமான சடுகுடு ஆட்டத்தையும் உள் வாங்கி, ஆக்‌ஷன் காட்சிகளின் வேகத்தை தனது ஒளிப்பதிவு மூலம் பார்வையாளர்களுக்கும் கடத்திவிடுகிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார்.

ஒரு படத்துக்கும் அடுத்த படத் துக்கும் கணிசமான இடைவெளி எடுத்துக்கொள்ளும் இயக்குநர் சசி, இம்முறை சற்று விரைவாக, சென்டிமென்ட், காதல், ஆக்‌ஷன் மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து, குடும்பத்துடன் காணும்படியான ஒரு கிரீன் சிக்னல் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x