

இந்த மிஷன் வெற்றிதான் என்று இஸ்ரோ நிகழ்வில் கலந்துகொண்ட மாதவன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைப் பலரும் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால், இறுதிக்கட்டத்தில் அது முடியாமல் போனதால் பலரும் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இஸ்ரோவிலிருந்து பிரதமர் மோடி கிளம்பும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் மனமுடைந்து அழுதார். அவரைப் பிரதமர் மோடி தேற்றினார்.
இந்த நிகழ்வில் 'ராக்கெட்ரி' படத்தை இயக்கி நடித்து வரும் மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் கலந்துகொண்டார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதை தான் 'ராக்கெட்ரி' என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டத்தில் நிலவில் தரையிறங்க முடியாமல் போனது குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எதுவாக இருந்தாலும் சரி.. இது சரித்திர நிகழ்வே. எனக்கென்னவோ விக்ரம் லேண்டரை நிலைநிறுத்தும் ஃபைன் பிரேக்கிங் த்ரஸ்டர்கள் தென் துருவ குளிர்ச்சியால் உறைந்து மூடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
நிலவின் தென் துருவ ஆராய்ச்சியில் 90%-ஐ ஆர்பிட்டரே மேற்கொள்ளும். கடவுளின் ஆசியில் அது பத்திரமாகவே இருக்கிறது. அதனால் இந்த மிஷன் இன்னமும் வெற்றிகரமாகவே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் மாதவன்.