

வண்ணமயமான வாழ்க்கை வாழ ஆசைப்படும் மனைவி, எட்டு வயது மகன் ஆகியோ ருடன் காஞ்சிபுரத்தின் புறநகர்ப் பகுதியில் சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மகா என்கிற மகாதேவன் (ஆர்யா). மகா, டிரா வல்ஸ் ஓட்டுநராக வேலைசெய் தாலும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் முன்னேற்றத்துக்கு உழைக்கும் கூலிப்படையின் டீம் லீடர். அதில் ஏற்பட்ட பகை காரண மாக, எதிரிகள் மகாவைக் கொன்று போடும் தருணத்துக்காக காத்திருக் கிறார்கள்.
ஈரோடு அருகே கிராமம் ஒன்றில் தனது தாயுடன் இயற்கை விவ சாயம் செய்து வாழ்ந்து வரும் விலங்கியல் பட்டதாரி முனி என்கிற முனிராஜ் (ஆர்யா). பிரம்மச்சரியத் தில் நம்பிக்கை கொண்ட இவரது வாழ்வில், மெல்லிய காதலுடன் குறுக்கிடுகிறார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இதழியல் மாணவியான தீபா (மகிமா). இதனால் முனி ராஜின் உயிரை எடுக்கத் துடிக்கி றார்கள் சாதி ஆணவம் கொண்ட மனிதர்கள்.
முன்பின் அறிந்திராத இருவரும் சந்தித்தார்களா? இவர்கள் தனித் தனியே எதிர்கொள்ளும் வாழ்க்கை யின் தீவிரச் சூழ்நிலை, எதிரிகள் யார் என்பதை இவர்களுக்கு உணர்த் தியதா? இறுதியில் மகா, முனி இரு வரும் என்ன ஆகிறார்கள் என்பதே கதை.
இரட்டை வேடங்களை கதாநாய கனின் சாகசங்களுக்காக அதிகமும் பயன்படுத்தி வந்திருக்கிறது தமிழ் சினிமா. துருவேறிய இந்த சாகச மனோபாவத்தை உதறிவிட்டு, சமகாலத்தின் அரசியல், அதன் இணைகோடாக வளர்ந்து நிற்கும் நிழலுலக வன்முறை, விஷமேறி நீலம் பாரித்துக் கிடக்கும் சாதியம் ஆகிய சமகாலத்தின் முக்கியப் பிரச்சினைகளால் அலைக்கழியும் சராசரி மனிதர்களாக இரட்டைக் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார் இயக்குநர் சாந்த குமார்.
‘மௌன குரு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சாந்தகுமார், வழக்க மான வன்முறைப் படங்களுக்கான பரபர திரைமொழியைத் தவிர்த் திருப்பதற்காகவே மனம் நிறையப் பாராட்டலாம். இயக்குநர் மகேந் திரனின் ‘ஜானி’ படத்தைக் கொஞ்சமாய் நினைவூட்டினாலும் ‘திரில்லர்’எனும் உணர்வின் இழை எந்த இடத்திலும் அறுந்துவிடாமல், திரைக்கதையின் முக்கியத் திருப்பக் கண்ணிகளைப் பின்னி யிருக்கும் விதம், அவரை ஒரு ‘புராமிசிங்’ திரைக்கதை ஆசிரிய ராகவும், இயக்குநராகவும் அடை யாளம் காட்டுகிறது.
பெரும்பாலான காட்சிகளில் இழையோடும் சுருங்கச் சொல்லு தல், சில காட்சிகளே வரும் கதாபாத் திரங்களையும் கதைக்கான முழு மையுடன் சித்தரித்தல் ஆகியவற் றில் தனது முத்திரைகளைப் பதித் திருக்கும் சாந்தகுமார், முதன்மைக் கதாபாத்திரங்களின் வாழ்வை ஒட்டி உருவாக்கிய சூழ்நிலைகள், மகா, முனி எனும் இருவரின் வாழ்க்கையைப் பதைபதைப்புடன் வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் சக மனிதர்களாக நம்மை உணர வைத்துவிடுகிறது. குறிப்பாகப் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய ஒரு கூலிக் கொலைகாரன், அவன் குடும் பத்தை நேசிக்கும் விதத்தைப் பார்த்து அவனுக்காகப் பதற வைப் பதன் பின்னணியில் அவனது கதாபாத்திர வார்ப்பு, பார்வை யாளர்களின் வெறுப்பை வென்று நிற்கிறது.
தற்கால வன்முறையின் வடிவங் களைப் பிரதானப்படுத்தும் படத் தில் முடிந்தவரை திரையில் வன் முறையை தவிர்த்திருப்பது படத் தின் தரத்தை உயர்த்திப் பிடிக் கிறது. சாதியம் மனித ரத்தத் தில் விஷம்போல் பரவிக் கிடக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்த, சாதிய ஆணவக் கொலை முயற்சியை ஒரு விஷப் பாம்பைக் கொண்டு சித்தரித்த விதம், ஒரு அசலான படைப்பாளி நினைத் தால் திரைமொழியில் இலக்கிய கனத்தை உருவாக்க முடியும் என்பதற்குச் சான்று. அதேபோல சாவின் விளிம்பைத் தொட்டு, மர ணத்தை மனக்கண்ணில் காணும் தருணத்தில் ‘இரட்டையர்’ ரிஷி மூலத்தின் தொடர்பைத் திரைக் கதையில் உள்ளீடு செய்த இடமும் இயக்குநர் படைப்பாளியாக மிளி ரும் மற்றொரு மகத்தான தருணம்.
மகா, முனி இருவரும் சந்திக் கும் புள்ளி, செய்நேர்த்தி மிக்க ஒரு சினிமா உருவாக்கும் தருணம் என்றாலும் அதை காலத்தின் வித்தையாகப் பார்வையாளர் களை உணர வைப்பதில் வென்று நிற்கிறார் இயக்குநர்.
கத்தியால் அவ்வளவு ஆழ மாகக் குத்துப்பட்ட மகா, ஏதோ முள் குத்தியதுபோல அதைப் பிடுங்கிவிட்டுவிட்டு இயல்பாக நகர்வதை நம்ப முடியவில்லை. அதேபோல படத்தின் முடிவுக் காட்சியில் காட்டப்படும் கத்தி ஒன்றே நடந்த அனைத்தையும் சொல்லிவிடும்போது ‘இயக்குந ரின் பின்னணிக் குரல் விளக்கம்’ தெளிவுரை நோட்ஸ் ஆகிவிடுறது.
ஆர்யாவுக்கு வாழ்நாள் கதா பாத்திரங்கள் எனலாம். அவற்றை, பாத்திர வார்ப்பின் வேறுபாட்டு நுட்பங்களை உணர்ந்து, முற்றாகத் தனது உடல்மொழி, வசன உச் சரிப்பு கொண்டு சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார்.
இந்துஜா மற்றொரு அரிய திறமை. கணவன் கைதாகிச் சென்றபின், மகனுடன் பேருந்தில் தப்பிச் செல்லுகையில் தனது கண்களின் வழியே உயிர் போகும் வலியையும் தவிப்பையும் காட்டியபடி திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும் காட்சியில் மனதை அள்ளிக்கொள்கிறார். ஆதிக்க சாதியில் பிறந்தபோதும் ஆணாதிக்கத்தைத் துணிந்து எதிர்ப்பதும் அடிபணிந்து வாழும் பெண்களைச் சகிப்பதுமான தீபா கதாபாத்திரத்தில் மகிமாவின் நடிப்பு கிளாஸ் ரகம். துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் களின் நட்சத்திர தேர்வும் அவர்கள் யாருமே வீணாக்கப்படவில்லை என்பதும் படத்தின் ஆழத்துக்கு அடித்தளம்.
கேணியின் அடியாழத்துக்கு இறங்கிச் செல்லும் அந்த ஒரு காட்சி போதும், அருண் பத்ம நாபனின் ஒளிப்பதிவு, படம் நெடு கிலும் திரில்லர் கண்களோடு கதா பாத்திரங்களை மறைந்திருந்து தொடர்வதும் கண்காணிப்பதுமான பதிவைத் தந்திருக்கிறது.
படத்துக்கு முதுகெலும்பாக பலம் சேர்த்திருக்கின்றன கதைக் கான பாடல்களையும், பின்னணி இசையையும் தந்திருக்கும் தமனின் உலகத் தரமான இசை.
வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்பின் அறியாத இரண்டு பேர், தாம் இரட்டையர்கள் என் பதை உணர வைக்க, அவர்களுக் கான வாழ்க்கைச் சூழலை, சம கால சமுதாயத்தின் அழுக்குகளி லிருந்து இயக்குநர் எடுத்தாண்ட விதத்தில், மகாமுனி சமூகத்தின் மனமாற்றம் கோரும் படைப்பாக உயர்ந்து நிற்கிறது.