

ஒரு பைக் ரேஸருக்கும் டிராஃபிக் எஸ்.ஐ.க்கும் மோதல் வெடித்தால் இவர்களை இணைக்க ஒரு பெண் மனம் துடித்தால் அதுவே 'சிவப்பு மஞ்சள் பச்சை'.
மதனுக்கு (ஜி.வி.பிரகாஷ்) அக்கா ராஜலட்சுமிதான் (லிஜோமோல் ஜோஸ்) உலகம். தம்பிக்குப் பிடிக்காத எதையும் அக்கா செய்யமாட்டார். ஒருநாள் அக்காவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக பைக் ரேஸ் ஓட்டுகிறார் மதன். இதனால் டிராஃபிக் எஸ்.ஐ. ராஜசேகரிடம் (சித்தார்த்) சிக்குகிறார். விதிகளை மீறிய மதனுக்குப் பாடம் புகட்ட நினைக்கும் எஸ்.ஐ. ராஜசேகர் நைட்டியை அணிவித்து மதனை காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார். மதன் அவமானப்படுவதை பொதுமக்கள் வீடியோவாக எடுக்க, அதை யூடியூபில் போடுகிறார் ராஜசேகர். இதனால் மதன், ராஜசேகரை தன் எதிரியாகவே பாவிக்கிறார்.
இதனிடையே ராஜலட்சுமியைப் பெண் பார்க்கும் படலம் நடக்க, அங்கு மாப்பிள்ளையாக ராஜசேகர் வந்து நிற்கிறார். இருவருக்கும் பிடித்துப்போக, மதனுக்கு மட்டும் பிடிக்காமல் போகிறது. தம்பிக்காக அந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று மறுக்கிறார் ராஜலட்சுமி. ஆனாலும் ராஜசேகர் விடாமல் ராஜலட்சுமிக்கு தன் அன்பைப் புரியவைக்கிறார். இது தெரிந்த மதன் மேலும் கொதிப்படைகிறார். இந்நிலையில் ராஜலட்சுமி என்ன முடிவெடுக்கிறார், தம்பிக்கு அம்மாவாக நடந்துகொள்கிறாரா, அக்காவின் மனதைப் புரிந்துகொண்டு தம்பி விட்டுக்கொடுக்கிறாரா, ராஜசேகர்- மதனின் ஈகோ என்ன ஆனது, வென்றது அதிகாரமா அன்பா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
'பிச்சைக்காரன்' படத்துக்குப் பிறகு மனதை மயிலிறகால் வருடிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி. சென்டிமென்ட், ஆக்ஷன், க்ரைம் என்று சகல தளங்களிலும் ஒருகை பார்த்தவர் முழுநீள குடும்பப் படமாக வடித்து வாழ்த்துகளை அள்ளிக் கொள்கிறார்.
நீயா- நானா என்று சித்தார்த்தும் ஜி.வி.பிரகாஷும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். முரட்டு மனிதர், நேர்மையான போலீஸ் அதிகாரி, கண்ணியம் தவறாத காதலன், அன்பான கணவன், பொறுப்பான மகன் என்று சித்தார்த் தன் கதாபாத்திரம் உணர்ந்து நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். ஈகோ உடைந்து போகும் இடத்திலும் இறங்கிப் போகும் தருணத்திலும் மனதில் நிறைகிறார்.
'சர்வம் தாளமயம்' படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார். பிடிவாதம், ஈகோ, துரோகம், அதிகாரம், அன்பு, தவறை உணர்தல், கோபம், சமாதானம் ஆகிய அத்தனை உணர்வுகளையும் அழகாகக் கடத்தி இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்கிறார்.
அம்மாவாக நடந்துகொள்ள முடியாத குற்ற உணர்ச்சி, அக்காவாக நடந்துகொள்ளும்போது அன்பின் வெளிப்பாடு, காதலியாக நடந்துகொண்டதில் உள்ள தேவை, தம்பியை நினைத்து உருகும் குணம், கணவனையும் தம்பியையும் சேர்த்து வைக்கப் போராடும் மனம் என நாயகியையும் மீறி தேர்ந்த நடிப்பால் வசீகரிக்கிறார் லிஜோமோல் ஜோஸ். அடுத்தடுத்து இவருக்கு வெளிச்ச வாய்ப்புகள் வரக்கூடும்.
காஷ்மீரா அழகுப் பதுமையாக வந்து போகிறார். முக்கியமான தருணத்தில் லிஜோமோல் ஜோஸ் முடிவெடுக்க உதவுகிறார்.
தீபா ராமானுஜத்துக்குப் படத்தில் பெரிய வேலை இல்லை. ஆனால், மகன் சித்தார்த்தின் மனதில் உள்ள அழுக்கை நீக்கி தூய்மைப்படுத்துவதன் மூலம் ஆளுமை மிக்க தாயாக மிளிர்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் அத்தையாக நக்கலைட்ஸ் தனம் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். மூர்த்தி, மதுசூதன ராவ், பிரேம் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
பிரசன்ன குமார் குட்கா உலகம், பைக் ரேஸ் களம், டிராஃபிக் சென்னையை தன் கேமராவுக்குள் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். சித்துகுமாரின் இசையில் தமயந்தியின் வரிகளில் மைலாஞ்சி பாடல் ரிப்பீட் ரகம். மோகன் ராஜன் வரிகளில் ஆழி சூழ்ந்த உலகிலே, உசுரே விட்டுப் போயிட்டா, இதுதான், ராக்காச்சி ரங்கம்மா பாடல்களும் மனதில் நிற்கின்றன. ஒரு படத்தின் எல்லாப் பாடல்களும் பொருத்தமாக இருப்பது இதில்தான் சாத்தியம். அதை சசி சாத்தியப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார். சான் லோகேஷ் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
ஆண் அதிகாரம் செய்து பெண்ணை அடிமைப்படுத்தத்தான் பார்க்கிறான். சக மனுஷியாக அன்பு செய்யப் பார்ப்பதில்லை என்பதை பூனைக்குட்டி அடைமொழியுடன் விளிக்கும் யதார்த்த முரணை இயக்குநர் சசி அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அக்கா- தம்பி உறவின் உன்னதத்தை, பாசாங்கற்ற பாசத்தை சசி தன் பாணியில் சொல்லியிருக்கும் விதம் அழகு. சமீபத்திய தமிழ் சினிமாக்களில் இரண்டு நாயகர்கள் கொண்ட திரைக்கதையில் இரு நாயகர்களுக்கும் சமமான அளவு நடிக்கக் களம் அமைத்துக் கொடுத்திருப்பது குறைவு. ஆனால், சித்தார்த், ஜி.வி. என இருவருக்கும் எந்தக் குறையும் வைக்காமல் சமமான முக்கியத்துவம் வழங்கியுள்ளார் சசி. அதற்காகவே அவருக்கு ஒரு சபாஷ்!
பைக் ரேஸ் காட்சிகளில் மட்டும் கிராபிக்ஸ் கொஞ்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமேக்ஸை நீட்டி முழக்காமல் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆண்கள் செய்யும் தவறை உணர்த்தி, பெண்களைப் பெருமைப்படுத்திய விதத்தில் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்த விதத்தில் 'சிவப்பு மஞ்சள் பச்சை'யை நெகிழ்ந்து வரவேற்கலாம்.