

இன்னும் சில தினங்களில் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அசுரன்’. பூமணி எழுதியுள்ள ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள இந்தப் படத்தில், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சுப்ரமணிய சிவா, பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற அக்டோபர் 4-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஏற்கெனவே இரண்டு பாடல்கள் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ட்ரெய்லர் அப்டேட் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வெளியீடு தள்ளிப்போனதாலும், பலமுறை இவ்வாறு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாலும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். அவர்களின் வருத்தத்தைப் போக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.