

அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.
அருண் விஜய் நடிப்பில் கடந்த 30-ம் தேதி ‘சாஹோ’ படம் ரிலீஸானது. பிரபாஸ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவருடைய நண்பனாக அருண் விஜய் நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படம், 350 கோடி ரூபாய் செலவில் தயாரானது. ஆனால், ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது ‘அக்னிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’ மற்றும் ‘மாஃபியா’ என 3 படங்கள் அருண் விஜய் கைவசம் உள்ளன. ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியுள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே, ரைமா சென், பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘மாஃபியா’ படத்தில், அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, கடந்த 29-ம் தேதி நிறைவடைந்தது.
விவேக் இயக்கிவரும் ‘பாக்ஸர்’ படத்தில், அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். சஞ்சனா கல்ராணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக ‘7-ம் அறிவு’ படத்தின் வில்லன் ஜானி ட்ரி நக்யென், அருண் விஜய்க்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும், பீட்டர் ஹெய்னிடம் குத்துச்சண்டை பயிற்சியைப் பெற்றுள்ளார் அருண் விஜய்.
‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் அருண் விஜய். தன்னுடைய கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ள அருண் விஜய், அடுத்த படத்துக்கான கதையைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் படத்தை இயக்கப்போவது ‘ஹரிதாஸ்’, ‘வாஹா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இந்தப் படத்தை அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது அருண் விஜய்யின் 30-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.