

'ராட்சசி' படத்துக்கு மலேசியக் கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்ததற்கு ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார்.
கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
தற்போது இந்தப் படத்தைப் பார்த்த மலேசியக் கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இதன் கதை அற்புதமாக இருக்கிறது. கதாபாத்திரங்களும் அருமை. கல்வி அமைச்சராக இந்தப் படத்தைப் பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் நம் நாட்டின் சூழலோடு என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி ஒரு பெரிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். பெரிய மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார்" என நீண்ட பதிவு ஒன்றைப் பாராட்டி வெளியிட்டார்.
இந்தப் பதிவால் மலேசிய மக்கள் மத்தியில் 'ராட்சசி' படம் பிரபலமானது. இதனால் படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியடைந்தது. தற்போது மலேசியக் கல்வி அமைச்சரின் பாராட்டுக்கு ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜோதிகா நன்றி தெரிவித்த கடிதத்தை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு இந்தியப் படத்தை நேரம் ஒதுக்கி நீங்கள் பார்த்து அது பற்றி ட்வீட் செய்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் காரணம் நீங்கள் கல்வித் துறையில் நல்ல மாற்றத்தைக் காண விரும்பினீர்கள் என்பதுதான்.
கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற தூய நோக்கோடு எடுக்கப்பட்ட எங்கள் ‘ராட்சசி’ படக்குழுவுக்கு இது ஒரு மிகப்பெரிய ஊக்கமாகும். படக்குழுவினரில் 90% சதவீதம் பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்பதால் வணிகப் படம் என்பதையும் தாண்டி இந்த படம் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகிறது.
ஒரு குழுவாக நாங்கள் விரும்புவது என்னவென்றால் எதிர்காலத் தலைமுறைகள் தரமான கல்வியில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் திறமைகளை நிரூபிக்கச் சமமான வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
இந்திய நாட்டில் பெரும் மாற்றத்தை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். எங்கள் கல்வி அமைச்சரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நல்ல மாற்றங்கள் குறித்து அதிகாரிகளோடு திட்டமிட்டு வருகிறார் என்பதைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்கள் நோக்கத்தை உலகறியச் செய்த உங்கள் ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும், ஊக்கத்திற்கும் நாங்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ராட்சசி படக்குழுவினர் சார்பாக நன்றி" என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.
சூர்யாவின் ட்வீட்டை மேற்கோளிட்டு மலேசியக் கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் “ஒட்டுமொத்த ராட்சசி படக்குழுவினருக்கும் நன்றிகள். ஒரு நாடு தன் எதிர்காலத்துக்கும் தன் மக்களுக்கும் செய்யும் முக்கியமான முதலீடுகளில் ஒன்று கல்வி. அது உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி. நல்ல படங்களைத் தொடர்ந்து உருவாக்குங்கள், அவற்றுக்காக நான் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.