

வி.ராம்ஜி
‘’ ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் விஜயகாந்தை ஹீரோவாக்கலாம் என்று சொன்னேன். ஆனால் அதற்குள் ராஜேஷை டைரக்டர் ஓகே செய்துவிட்டார். இல்லையென்றால், ‘கன்னிப்பருவத்திலே’ படம்தான் விஜயகாந்துக்கு முதல் படமாக இருந்திருக்கும்’’ என்று கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜின் முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் வெளியாகி 40 வருடங்களாகின்றன. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் 40 ஆண்டு திரை அனுபவங்கள் குறித்து, மிக நீண்டதொரு பேட்டியை வழங்கினார் கே.பாக்யராஜ்.
அதில் அவர் கூறியதாவது:
‘’எங்கள் டைரக்டர் சார் (பாரதிராஜா) படமான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்குவதற்கான ஆரம்ப வேலையில் இறங்கிவிட்டேன். ஆனால் டைரக்டர் ’புதிய வார்ப்புகள்’ படத்துக்கு என்னை நடித்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். நானும் சரியென்று சொல்லிவிட்டு, என் பட வேலைகளை கொஞ்சம் ஒத்திவைத்தேன்.
பிறகு, ‘புதிய வார்ப்புகள்’ பட வேலைகள் முடிந்தன. மீண்டும் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ வேலையில் இறங்கினேன். இந்த சமயத்தில், டைரக்டர் பி.வி.பாலகுரு அண்ணன், எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில், படம் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதுதான் ‘கன்னிப்பருவத்திலே’.
அந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்துக்கு எழுதிக்கொண்டே ‘சுவரில்லாத சித்திரங்கள்’ வேலையிலும் இறங்கினேன். ஆனால், ஒருநாள் என்னை அழைத்து ‘அந்த வில்லன் ரோலை நீயே பண்ணிரு’ என்றார். அப்போது ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஏக்நாத், ‘நடிப்புச் சொல்லித் தர்றவரையே அந்தக் கேரக்டர்ல நடிக்க வைச்சிருங்க. நல்லாருக்கும்’ என்றாராம். திரும்பவும் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ வேலையை தள்ளிவைக்கவேண்டி வந்தது.
தி.நகரில் ரோகிணி லாட்ஜ் என்று உண்டு. அதில்தான் விஜயகாந்த் தங்கியிருந்தார். அங்கே தங்கி, வசனம் எழுதிக்கொண்டிருக்கும் சமயங்களில், அவரைப் பார்த்திருக்கிறேன். அவருடைய கண்களில் ஒரு பவர் இருக்கும். ‘கன்னிப்பருவத்திலே’ கிராமத்து சப்ஜெக்ட். அதில் மாடு பிடிக்கும் வீரராக இவர் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.
விஜயகாந்தை அழைத்துக்கொண்டு எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் அறிமுகப்படுத்தினேன். அவருக்கும் பிடித்துவிட்டது. ’ஆனா பாரு ராஜன்... பாலகுரு சார், அந்தக் கேரக்டருக்கு இன்னொருத்தரை ஓகே பண்ணி வைச்சிருக்காரே. நீ அவர்கிட்ட பேசிப்பாரு’ என்று சொன்னார் ராஜ்கண்ணு.
பாலகுரு சார் ஏற்கெனவே ஒருவரை செலக்ட் செய்துவிட்டார் என்பதால், நான் விஜயகாந்த் குறித்து அவரிடமே பேசவே இல்லை. ஒருவேளை, பாலகுரு சார் யாரையும் செலக்ட் செய்யாமல் இருந்திருந்தால், விஜயகாந்தின் முதல் படம் ‘கன்னிப்பருவத்திலே’வாகக் கூட இருந்திருக்கலாம்.
எது எது, யார் யார், எப்போது வெளிப்படவேண்டுமோ அப்படி வெளிப்பட்டே தீருவார்கள். அது என் விஷயத்திலும் சரி, விஜயகாந்த் விஷயத்திலும் சரி... இன்னும் பலரின் வாழ்விலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.
இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண..