திட்டமிட்டபடி வெளியீடு இல்லை: வருத்தம் தெரிவித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படக்குழு

திட்டமிட்டபடி வெளியீடு இல்லை: வருத்தம் தெரிவித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படக்குழு
Updated on
1 min read

திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாததால், வருத்தம் தெரிவித்துள்ளது 'எனை நோக்கி பாயும் தோட்டா' படக்குழு

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது.

பல்வேறு விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள் என அமர்ந்து பேசி இந்தப் படத்தை வெளிக் கொண்டுவர பெரும் முயற்சி செய்தனர். இதனால் செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு என படக்குழு அறிவித்தது. பலரும் இந்த முறை வெளியாகிவிடும் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்தனர். ஆனால், திட்டமிட்டபடி இன்று (செப்டம்பர் 6) வெளியாகவில்லை.

இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகாதது குறித்து தயாரிப்பாளர்கள் ஒருவரான எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை.

பெருமுயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். மிக விரைவில், அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது நீண்ட பெரும் பயணம் என நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை. இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றம், விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துகளையும் கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இலக்கை எட்டும் நிலையில், நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும், ஆதரவும் மட்டுமே.

இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையரங்கில் நீங்கள் பார்க்கும் போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமார நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in