

நாவல் திரைப்படமாகும்போது அதிலிருக்கும் எல்லா விஷயங்களையும் திரையில் கொண்டு வர முடியாது என்பதால் 'வெக்கை' நாவல் படித்தவர்களின் எதிர்பார்ப்பை அசுரன் பூர்த்தி செய்யாது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
ஒரு குடும்பம், ஒரு கொலையைக் கொண்டாடுவதை தனது 'வெக்கை' நாவலில் விவரித்திருந்தார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி.
ஒரு பதின்ம வயதுச் சிறுவன் செய்யும் கொலை அவனது குடும்பத்தில் கொண்டாட்டத்தைக் கொண்டு வருகிறது. காரணம், தனது அண்ணனின் கொலைக்கு அவன் பழிவாங்கியதுதான். தென் தமிழ்நாட்டில், வறண்ட கரிசல் பூமியில் தங்கள் கவுரவத்தையும், வாழ்வுரிமையையும் காக்கப் போராடும் ஒரு சாதரண குடும்பத்தின் ஆக்ரோஷத்தை 'வெக்கை' நாவல் பிரதிபலித்ததாகவே இதை விமர்சகர்கள் பார்த்தார்கள்.
இந்த நாவலே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'அசுரன்' என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகிறது. பயங்கரமான அந்தக் கொலையைப் பெருமைப்படுத்தாமல் இந்தக் கொலைக்குப் பின் அந்தக் குடும்பம் அந்தச் சூழலை எப்படிக் கடந்து வருகிறது என்பதிலேயே தான் கவனம் செலுத்தியிருப்பதாகச் சொல்லுகிறார் வெற்றிமாறன்.
"வன்முறை எதற்கும் தீர்வாகாது என்ற எண்ணம் கொண்டவன் நான். அப்படியான வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு குடும்பங்கள் சிதைகின்றன, பாதிக்கப்படுகின்றன" என்கிறார்.
இதில் கொலை செய்யும் சிறுவன் செலம்பரமாக, கனடா நாட்டைச் சேர்ந்த தமிழ் இளைஞர் டீஜே நடிக்கிறார். அவரது தந்தை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.
ஒட்டுமொத்தக் கதையும் கொலைக்குப் பின் தலைமறைவாகும் சிதம்பரமும் அவனது அப்பாவும் பேசும் உரையாடல் மூலம் விவரிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைகின்றனர். இந்தக் கொலையைச் செய்ய தந்தை காத்திருந்தாலும், மகன் முந்திக் கொள்கிறான். தந்தையால் செய்ய முடிந்தது, தன் மகன் இருட்டில் வடக்கூரானைக் கொல்ல, ட்ரான்ஸ்ஃபார்மரை அணைத்து வைத்தது மட்டுமே.
தன் மகன் சாதித்தது, அவனின் வெடிகுண்டு செய்யும் திறமை ஆகியவற்றை நினைத்து தந்தை பெருமைப்படுகிறார். சிதம்பரத்தின் ஒரே கவலை கொலைக்குப் பின் அரிவாள் கூர் மழுங்கிவிட்டதைப் பற்றியதுதான் .
கதை 80-களின் மத்தியில் நடக்கிறது. 60-களில் கொலைக் குற்றத்துக்காக சிறைக்குச் சென்று தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த தந்தையின் இளமைக் காலம் பற்றியும் இந்தப் படம் காட்டுகிறது.
"எல்லா மகன்களுக்கும் அவர்களின் தந்தையோடு மறக்க முடியாத பயணம் ஒன்று இருக்கும். இந்தப் படம் அப்படியான பயணத்தைப் பற்றியதுதான். தனுஷ் இரண்டு காலகட்டங்களிலும் தோன்றுவார். எங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளார். அர்ப்பணிப்புடன் இருக்கும் நடிகரால் தான் 'அசுரன்' என்ற தலைப்புக்கு ஏற்றவாறு நடிக்க முடியும். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் (நடிப்பில்) பிரகாசிக்க முடியும். நாவல் படித்தவர்கள் எதிர்பார்ப்புகளை இந்தப் படம் பூர்த்தி செய்யாது. ஆனால் படிக்காதவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்" என்கிறார் வெற்றிமாறன்.
- கோலப்பன் (தி இந்து, ஆங்கிலம்) | தமிழில்: கா.கி