

'எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்பது கௌதம் மேனன் வாங்கும் காசோலையில் தான் இருக்கிறது என்கின்றனர் விநியோகஸ்தர்கள். அதை வைத்துதான் படம் ரிலீஸ் ஆவதை உறுதி செய்ய முடியும் என்கிறார்கள்.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'. தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படம் மார்ச் 2016-ல் ஆரம்பிக்கப்பட்டது. பணப் பிரச்சினையால் படப்பிடிப்பு நடக்காமல் தாமதமானது. கடந்த வாரம் ட்விட்டரில் படத்தின் புதிய ட்ரெய்லரைப் பகிர்ந்த கௌதம் மேனன், படத்தின் வெளியீட்டைச் சுற்றியிருந்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கௌதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன. ஸ்டைலான படங்களை இயக்கியிருக்கும் கௌதம் மேனனுடன் தனுஷின் முதல் படம். மேலும் இதில் மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி, செந்தில் வீராசாமி ஆகியோர் நடித்துள்ளனர். சுனைனா, ராணா இருவரும் கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர். ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா என இரண்டு ஒளிப்பதிவாளர்கள். ஆறு மாதங்களுக்கு முன்னால் தணிக்கை முடிந்த இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
நீடிக்கும் சிக்கல்?
'எனை நோக்கிப் பாயும் தோட்டா' செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. கௌதம் மேனனுக்கு இப்போது இருக்கும் பணச் சிக்கலிலிருந்து அவரைக் காப்பாற்ற பிரபலமான பைனான்சியர்கள் பலரும் முன் வந்தார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மீதிப் பணத்தை ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் தவணை முறையில் தர வேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன்படி செப்டம்பர் 6 அன்று 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' எந்தச் சிக்கலும் இன்றி வெளியாவதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும் துறையில் ஒரு சிலர் படத்தின் வெளியீடு குறித்து சந்தேகங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், ''இன்று விநியோகஸ்தர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நல்ல முடிவு எட்டப்படும். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க கௌதம் மேனன் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்துக்கான அட்வான்ஸ் தொகையைப் (காசோலை) பெற கௌதம் மேனன் லண்டன் சென்றுள்ளார். அவர் அட்வான்ஸ் பெற்றுவிட்டால் சனிக்கிழமைக்குள் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ரிலீஸ் ஆகிவிடும். படம் வெளியாவதும் வெளியாகாததும் கௌதம் மேனன் பெறும் காசோலையில்தான் இருக்கிறது'' என்றார்.